2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கால நீடிப்பு விவகாரம்: ஐ.தே.கவுக்கு சு.க ஆதரவில்லை

பைஷல் இஸ்மாயில்   / 2017 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண சபை உட்பட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடித்து, 9 மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கவில்லையென, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர், இன்று (12) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பில் வியாழக்கிழமை (19) இரவு நடைபெற்றது.

“இதன்போதே, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

“கிழக்கு மாகாண சபை உட்பட 9 மாகாண சபைகளினதும் கால எல்லையை நீடித்து, ஒரே நேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.

“இந்த விடயம் சம்பந்தமாகவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. 

“இதன்போது, கிழக்கு மாகாண சபை உள்ளிட்ட சில மாகாண சபைகளின் கால எல்லையை நீடிப்பதற்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கப் போவதில்லை என்ற தெளிவான தீர்மானத்தை, ஐ.தே.க. தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று (11) தெளிவுபடுத்தப்பட்டது.

“எந்தக் காரணம் கொண்டும், ஊழல் நிறைந்த கிழக்கு மாகாண சபைக்கான கால நீடிப்பு வழங்குவதில்லை என்றும் இதன்போது, தீர்மானம் எடுக்கப்பட்டது. 

“கிழக்கு மாகாண சபை, உரிய நேரத்தில் கலைக்கப்படும். இது தொடர்பில் பிரதமர் முன்வைத்துள்ள சட்டமூலம், நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும்போது, அதனை எதிர்த்து வாக்களித்து தோற்கடிப்பதற்கான சகல நடவடிக்கையையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும்.

“இத்தீர்மானமானது, பல மணி நேர கலந்துரையாடல்களுக்கு பின்னரே எடுக்கப்பட்டது.

“நல்லாட்சி அரசாங்கத்தின் பங்காளியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் ஆணைக்கு எதிராகவோ, ஜனநாயகத்துக்கு எதிராகவோ ஒருபோதும் செயற்படமாட்டாது.

எனவே, கிழக்கு மாகாண சபையைத் தெரிவு செய்த மக்கள், தமது ஆணையை மீறி, மேலதிகமாக ஒரு நாளை கூட வழங்கமாட்டார்கள். இதற்கு ஒருபோதும் சு.க. ஆதரவாக இருக்காது” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X