2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘கோட்டாவிடம் விசாரிக்கவும்’

Editorial   / 2018 ஒக்டோபர் 11 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

“ஆட்சிமாற்றத்தை எவ்வாறு ஏற்படுத்துவதெனத் தெரியவில்லை” என்ற பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவின் கூற்று, பாரதூரமானதெனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், இராணுவ சூழ்ச்சிக்கான திட்டமிடல்கள் உள்ளனவா என அவரிடத்தில் விசாரணை செய்ய  வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் நடத்திய பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பால் பக்கெட்டுகளில் விஷம் கலந்திருந்தாகக் கூறப்பட்டமை உண்மைக்குப் புறம்பானதெனத் தெரியந்துள்ளது என்றார்.

“ஆர்ப்பாட்டத்தின் தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற ஒன்றிணைந்த எதிரணியினர், கொழும்பில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரான என் மீது பலி சுமத்தி, முஸ்லிம் - சிங்கள முரண்பாட்டைத் தோற்றுவிக்க முற்பட்டனர்” என்றார்.

இருப்பினும், அவர்களின் முயற்சி சாத்தியப்படவில்லை. ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற தவறுகளை மறந்துவிட்டுப் பேசுகின்றனர்.  

மேலும், பால்பக்கெட் விவகாரம் தொடர்பில் போலிப் பிரசாரம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவனச, செஹான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர ஆகியோரிடத்தில் 500 மில்லியன் ரூபாய் நட்டயீடு கோரி, நோட்டீஸ் அனுப்பத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

​அதேநேரம், விசேட மேல்நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்திருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது ஆனால், அதனை எவ்வாறு செயவதெனத் தெரிவியவில்லை என்று கூறியிருந்தார்.

நாட்டில், உயர் பதவி வகித்த ஒருவர் இவ்வாறு கூறுவது பாரதூரமானதாகும். அவரின் கூற்று எமக்கு சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது. அதன் பின்னால் இராணுவப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கம் இருக்கலாம் அல்லது பயங்கரவாத முறையில் சூழ்ச்சிகள் இருக்கலாம். எனவே, இது குறித்த விசாரணைகளைத் துரிதமாக முன்னெடுப்பது அவசியமானதென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜனநாயக முறைக்கு புறம்பாக இவ்வாறான சூழச்சிகள் நடத்தப்படுவதற்கான திட்டமிடல்கள் இருக்கக்கூடும். பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவிடத்தில் விசாரணைகளை முன்னெடுப்பது போன்றே கோட்டாபய ராஜபக்‌ஷவிடமும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் ​என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .