2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சர்வதேசத்தின் முன்பாக ’இலங்கை அடிபணியாது’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்  

சர்வதேசத்தின் முன்பாக, இலங்கையை அகௌரவப்படுத்துவதற்கு இடமளிக்கப்படாதெனவும் எமது சுயாட்சி மற்றும் இறையாண்மையை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்துள்ளதாகவும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவினால், 27 (2) நிலையியற் கட்டளையின் கீழ், இலங்கை தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள யோசனை குறித்த இலங்கையின் நிலைபாடு என்னவென்பது தொடர்பில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் மாரப்பன, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், அவரது அழைப்பின் பேரில், 2009ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகளின் அப்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூன், யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென, ஒன்றிணைந்த அறிக்கையொன்றை வெளியிட்டதை நினைவுபடுத்தினார்.

அத்துடன், 2009ஆம் ஆண்டு மே மாதம், இலங்கை தலைமைலான யோசனையொன்று, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி, அரசியல் தீர்வு ஊடாக, நிரந்தர சமாதானம், நல்லிணக்கத்தை எற்படுத்த, இந்த யோசனை மூலம் இணக்கம் தெரிவிக்கப்பட்டு இருந்ததெனவும் இது நிறைவேற்றப்படாத காரணத்தால், 2012, 13, 14ஆம் ஆண்டுகளில், இலங்கை அரசாங்கத்தின் எதிர்ப்புக்கு மத்தியில், 3 யோசனைகள் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறிய அமைச்சர், இறுதியாக 2014ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட யோசனையிலேயே, வெளிநாட்டு விசாரணையொன்றை முன்னெடுப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் கேட்ட விடயங்களுக்கு பதிலளிக்காமல், கடந்தகாலச் சம்பவங்களை கூறுவதாக் கூறினார்.

இதன்போது, தான் அதற்கும் பதிலளிப்பதாகக் கூறிய அமைச்சர் திலக் மாரப்பன, “ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்துள்ள 20 யோசனைகளையும் நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். வடக்கு, கிழக்கில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளில் 90 சதவீதமானவை கூட, இன்னமும் அந்த மக்களிடம் கையளிக்கப்படவில்லை.

அதனால், அந்த யோசனைகளை நிறைவேற்ற, மேலும் 2 ஆண்டுகால அவகாசத்தை நாம் கோரியுள்ளோம். 2017ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நிறைவேற்றுவதற்காக நாம் அப்போது, இரண்டு ஆண்டுகால அவகாசத்தைக் கோரியிருந்ததைப் போன்று, இன்னும் இரண்டு ஆண்டுகளைக் கோரியுள்ளோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .