2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’ஜெனீவாவில் வெல்வோம்’

Editorial   / 2021 மார்ச் 02 , மு.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனீவா விவகாரத்தை அரசாங்கம் சிறந்த முறையில் கையாண்டு, அதில் வெற்றி கொள்ளுமென நம்பிக்கை தெரிவித்துள்ள கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இராணுவத்தைப் பாதுகாக்கவேண்டிய தேவையேற்படின், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

'அப்பாவித் தமிழ் இளைஞர், யுவதிகளைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள் சர்வதேச  அரங்கில், மனித உரிமைகள் குறித்து இன்று வாதிடுகிறார்கள்' என்றார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

'ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரது அறிக்கை, இலங்கையின் சுயாதீனத்துக்குப்  பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் காணப்பட்டது. ஆகையால், அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது' என்றார்.

இறுதிக்கட்ட யுத்தத்தில்,  மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குத்  தேவையான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை. மாறாக, 2019ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டு,   ஆணையாளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார் என்று தெரிவித்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், 


அப்பாவித் தமிழ் இளைஞர்களைப் பலவந்தமான முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக்கியவர்கள், இன்று சர்வதேச அரங்கில், மனித உரிமைகள் பேரவை குறித்து வாதிடுகிறார்கள். இவர்களுக்கு எதிராக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றார்.

'30 வருட கால யுத்தத்தைஇ நிறைவு செய்த இராணுவத்தினர், அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. . இராணுவத்தினரைப் பாதுகாக்க, தற்போதை சட்டம் போதுமானதாக அமையாவிடின், புதிதாகச் சட்டத்தை உருவாக்குவோம்' என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாக இலங்கை 70 வருட காலமாக, இணக்கமாகச் செயற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை முழுமையாகச் செயற்படுத்தி உள்ளோம் என்று தெரிவித்த அவர், ஆனால்இ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு எதிராகச் செயற்படுகின்றார்  என்றார்.
  
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையற்றது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை பெறுமதியற்றது என்று குறிப்பிட முடியாது எனத் தெரிவித்த அவர், அடிப்படைவாதச் செயற்பாடுகள், எதிர்காலத்தில் நாட்டில் தோற்றம்பெறாமல் இருப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய  நடவடிக்கைகள் குறித்து, ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது என்றார்.

 
நீண்ட அறிக்கை என்பதால், அந்த அறிக்கையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மிகவும் ஆழமாக ஆராய்ந்து வருகின்றது எனத் தெரிவித்த அவர், எமது கட்சியின் நிலைப்பாட்டை, அடுத்தவாரம் தெளிவாகப் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

 
ஆழமாக ஆராய்ந்ததன் பின்னரே, அறிக்கை குறித்து அறிவிக்க வேண்டும். ஒருசில பக்கங்களை மாத்திரம் புரட்டிவிட்டு, அதிருப்தி கொள்ள முடியாது; அவ்வாறு செய்வது பொறுப்பான செயலல்ல என்றார்.


'விசாரணை ஆணைக்குழுவுக்கு, தண்டனை வழங்கும் அதிகாரம் கிடையாது. குண்டுத்தாக்குதல் இடம்பெற்றபோது, பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கைகளை எடுக்க, சட்டமா அதிபருக்குப் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்' என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .