2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தனிக் கட்சிக்கு வாய்ப்பில்லை’

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.விஜிதா

எனது கட்சி என்னை நியமிக்காவிடின், வீட்டுகுச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், ஒரு கட்சியை ஆரம்பிக்க முடியுமெனத் தான் கூறியிருந்ததாகத் தெரிவித்த வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நான் கூறியவற்றில் முதல் இரு விடயங்களையும் விட்டு, மூன்றாவதாகக் கூறிய விடயங்களை மட்டும் ஊடகங்கள் பெரிதாகக் கூறிவிட்டன. எவ்வாறெனினும், தனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனடாத் தூதுவர் டேவிட் மைக்கன் மற்றும் வட மாகாண முதமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு, வடமாகாண முதலமைச்சர் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் நேற்று (11) நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில், வடமாகாண அபிவிருத்திகள், டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி உள்ளிட்ட அரசியல் நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இதன்போது, முதலமைச்சரின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றி வினவிய தூதுவர், புதிய கட்சி உருவாக்குவது தொடர்பிலும் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போதே, முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போனோர்களின் அலுவலகம் தொடர்பாக தூதுவர் வினவியபோது, அதற்குப் பதிலளித்த முதலமைச்சர்,

காணாமல் போனோர்கள் அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலி பீரிஸ், அவரது மனசாட்சியின் படி செயற்பட அனுமதிகள் இருக்கின்றதா என்பது எனக்குத் தெளிவாகக் கூற முடியாது. காலம் போனதன் பின்னரே காணாமல் போனோர்களின் அலுவலகத்தின் ஊடாக மக்கள் பெற்றுக்கொண்ட நியாயத்தின் வெற்றி, தோல்விகளைப் பற்றிக் கூற முடியுமெனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், வடமாகாணத்தில் சட்டமும் ஒழுங்கும் மீறப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றதே எனத் தெரிவித்த தூதுவர் அது தொடர்பிலும் வினவினார்.

இதற்குப் பதிலளித்த முதலமைச்சர்,

பொலிஸார் தமது புள்ளி விவரத்தின் பிரகாரம் அவ்வாறு சட்ட, ஒழுங்குகளை சீர்குலைக்கும் வகையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை என கூறுகின்றார்கள் என்று தெரிவித்த முதலமைச்சர், இருந்தும் ஒரு சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றை மறுக்க முடியாது என்றார்.

இதேபோன்றுதான் தென்பகுதியிலும் இடம்பெறுவதாக, முதலமைச்சர் தூதுவரிடம் தெரிவித்தார்.

அத்துடன், சட்ட ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர். அந்த வருகையின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள சட்ட ஒழுங்குகள் பற்றி விரிவாக ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கனடாத் தூதுவரிடம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .