2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேர்தல் திருத்தத்தில் கையெழுத்திட்டார் சபாநாயகர்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் (திருத்த) சட்டத்தில், சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று (12) கையெழுத்திட்டார். இதன்மூலம், ஏற்கெனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக, அடுத்தாண்டு ஜனவரியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

கையெழுத்திடும் வைபவத்தில் கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு, நாட்டின் அடிமட்ட நிர்வாகம், உள்ளூராட்சி மன்றங்களாலேயே முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம், நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அபிவிருத்தி முயற்சிகளைக் கொண்டு செல்வதற்கும், மக்களின் கவலைகளை இல்லாது செய்வதற்கும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவாக நடத்துவது மிகவும் அவசியமானது என்று தெரிவித்தார். மக்களின் நாளாந்த நடவடிக்கைகளோடு, உள்ளூராட்சி மன்றங்கள் இணைந்து காணப்படுவதன் காரணமாக, சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும், இத்தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார். 

மிகவும் விமர்சனத்துக்கு உள்ளான விருப்பு வாக்கு முறையை ஒழித்ததோடு மட்டுமல்லாமல், வட்டார முறையில் தமது பிரதிநிதிகளைத் தெரிவுசெய்வதற்கு மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டமையே, இந்தச் சட்டத்தில் காணப்படும் மிகவும் முக்கியமானதும் முன்னேற்றகரமானதுமான அம்சம் என அவர் தெரிவித்தார். அத்தோடு, உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தை மேலும் பலப்படுத்துவதற்கு உதவுவதாக, சில நாடுகள், தனக்கு உறுதியளித்துள்ளன என்றும் குறிப்பிட்டார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தை, துரிதமாகவும், சிறுபான்மையினக் கட்சிகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் திருப்திக்கு ஏற்றவாறும் உருவாக்கியமைக்காக, அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு, தனது பாராட்டுகளையும், சபாநாயகர் வெளிப்படுத்தினார். 

நாடாளுமன்றத்தில், இம்மாதம் 2ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சட்டமூலமானது, மாநகர, நகர, பிரதேச சபைச் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .