2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரயில்வே செயற்பாட்டுப் பொறியியலாளர்கள் மேற்கொண்டுவந்த வேலைநிறுத்தத்தைக் கைவிடுவதற்கு, அச்சங்கம் நேற்று (12) மாலை முடிவெடுத்தது. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு, ஜனாதிபதியின் செயலாளர், இதன்போது ஒப்புக்கொண்டார் என, சங்கம் தெரிவித்தது. இச்சந்திப்பின் போது, இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு, செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிக்கையை, நவம்பர் 20ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் பணித்தார் என்றும், சங்கம் குறிப்பிட்டது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தலைமையில், எட்டு உறுப்பினர்களைக் கொண்ட குழுவே அமைக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் கைவிடப்பட்ட போதிலும், நேற்றைய நாளுக்கான தபால் ரயில் சேவைகள் நடைபெறாது என்று, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இதனால், இன்று காலை முதலேயே, போக்குவரத்துச் சீராகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பயிலுநர் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் போது, ஆட்சேர்ப்புக் கொள்கைகளுக்கு மாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றஞ்சாட்டி, நேற்று முன்தினம் மாலை முதல், ரயில்வே செயற்பாட்டுப் பொறியியலாளர் சங்கமும் ரயில்வே காப்பாளர் சங்கமும், வேலைநிறுத்தத்தை ஆரம்பித்திருந்தன. 

முன்னதாக, போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுக்கும் சங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போதிலும், அவை தோல்வியடைந்திருந்தன. இதனால், இவ்வேலைநிறுத்தம் தொடருமென அஞ்சப்பட்டது.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கொழும்பிலுள்ள அநேகமான அலுவலங்களுக்கு, ஊழியர்கள் நேரந்தாழ்த்தியே வருகை தந்திருந்ததோடு, கொழும்பின் பல அலுவலங்கள், நேற்று மாலையில், நேரத்துக்கே மூடப்பட்டன.

இதேவேளை, ரயில்வே சேவையை, அத்தியாவசியத் தேவையாகப் பிரகடனம் செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, போக்குவரத்து அமைச்சர் கோரியிருந்தார். 

ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எம். அபேவிக்கிரமவின் கருத்துப்படி, நேற்றைய தினம், பயணிகள் ரயில்கள் 12 இயக்கப்பட்ட எனவும் கட்டுநாயக்கவுக்கான எரிபொருளைக் கொண்டுசெல்லும் ரயிலும், வழக்கம்போல் இடம்பெற்றது எனவும் தெரிவித்தார்.  

சொகுசு ரயில் சேவைகளை முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்காக, சொகுசு பஸ்கள் சில சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஏற்கெனவே பதிவுசெய்த பயணச்சீட்டுகளை, இந்தச் சேவைகளுக்காகப் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X