2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பிளவு இல்லை; துரோக கும்பல் வெளியேற்றப்பட்டது'

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜி.விஷ்ணுகாந்த்

அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கிவந்த ஜனநாயக இளைஞர் இணையம் கட்சி செயற்பாடுகளில் இருந்து விலகியுள்ளது.

கொள்கை முரண்பாடு காரணமாகவும் மக்களுக்கான எவ்வித சேவையையும் ஜனநாயக மக்கள் முன்னணி பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தே, இளைஞர் இணையத்தின் அங்கம் வகிக்கும் 17 பேர் இவ்வாறு கட்சி செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளனர்.

இது தொடர்பில் ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர் ஜி. விஷ்ணுகாந் கருத்து தெரிவிக்கையில்,

“தலைவர் மனோ கணேசனை அரசியலில் அழிக்கும் அவா கொண்ட சில மாற்று அரசியல் நபர்களுடன் இரகசிய தொடர்புகளை பேணி வந்த, ஆறு  இளைஞர் இணைய அங்கத்தவர்கள் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து, இந்நபர்களை இயக்கும் மாற்று அரசியல் நபர்கள், இவர்களை கொண்டு ஒரு ஊடக மாநாடு நடத்தியுள்ளார்கள். இங்கே பதினேழு பேர் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக சொல்வது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். ஆறு பேரை தவிர ஏனையோர் கட்சியுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்கள்.

கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஆலோசகர்களை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சில், அமைச்சர் மனோ கணேசன்  நியமித்து கொண்டுள்ளார் என்று இந்த கும்பல், குற்றம் சாட்டுகிறது. அமைச்சின் ஆலோசகர்களாக இருவர் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒருவர் ஓய்வு பெற்ற முன்னாள் தொழில் திணைக்கள பணியாளர், இந்நாள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் துணைத்தலைவர், கல்விக்குழு செயலாளர் த.மனோகரன், அடுத்தவர் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக கல்வித்துறை பீடாதிபதியும், பிரபல கல்வித்துறை பேராசிரியருமான சோ.சந்திரசேகரம்.  இவர்களை விலக்கி விட்டு, இந்த கும்பல் சிபாரிசு செய்யும் நபர்களை நியமிக்க முடியாது.

தற்போது பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்புள்ள பதவியில் சிங்களம், தமிழ், ஆகிய அரசகரும மொழிகளையும்,  ஆங்கிலம் என்ற இணைப்பு மொழியையும் அறிந்த  பேராசிரியர் சோ. சந்திரசேகரம், பொருத்தமானவர் என அமைச்சர் மனோ கணேசன் கருதுகிறார். இலங்கை வரலாற்றில் முதன் முதலாக, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில், இன்றைய அரசின் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும்,  அமைச்சினால், 10,124 பாடசாலை பிள்ளைகளுக்கு சீருடை, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. முகத்துவாரம் இந்து கல்லூரி, பம்பலப்பிட்டி இந்து கல்லூரி, வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி, மத்திய கொழும்பு இந்து கல்லூரி, இராமகிருஷ்ணா வித்தியாலயம், பொரளை தனிநாயகம் வித்தியாலயம், அவிசாவளை சீசீடிஎம் வித்தியாலயம் மற்றும் கணபதி இந்து வித்தியாலயம் ஆகியவை உட்பட இன்னும் பல தமிழ்ப் பாடசாலைகளுக்கு இளைஞர் அமைச்சின் சேவை வழங்கப்பட்டுள்ளது.

26 நடமாடும் சேவைகளை நடத்தி, ஆவணங்களை அதிகாரபூர்வமாக மொழிபெயர்த்து, அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தந்த அமைச்சு, அதற்குரிய  பொறுப்புகளையே செய்ய முடியும். புதிய அமைச்சு பொறுப்புகளை பெறுவது என்பது கடையில் சென்று பொருட்களை வாங்குவதென இந்த அரசியல் சிறுவர்கள் சிறுபிள்ளைத்தனமாக நினைக்கிறார்கள்.

அரசியல் கைதிகள் பிரச்சினை, முல்லைத்தீவு கேப்பாபிளவு காணிப்பிரச்சினை, கிளிநோச்சியில் போராடும் காணாமல் போனோர் குடும்பங்களின் பிரச்சினை ஆகியவற்றுக்கும் தலைவர் மனோ கணேசனை, இந்த கும்பல் இழுத்து விட்டுள்ளது. இந்த அரசு ஆட்சி பீடமேறிய போது, அரசியல் கைதிகளின் தொகை 200க்கும் அதிகமாக இருந்தது.  இப்போது அது 130 அளவில் உள்ளது. வடக்கில் காணிகள் மீள கையளிக்கப்படுவது, கணிசமாக நடைபெறுகிறது.  இன்னமும் எஞ்சியுள்ள காணிகளும் படிப்படியாக  விடுவிக்கப்படும். இவை தொடர்பாக தொடர்ச்சியாக தலைவர் மனோ கணேசன், அமைச்சரவையில் வலியுறுத்தி வருகிறார். ஆனால், இவ்விவகாரங்கள் தொடர்பாக இன்று நேரடியாக பொறுப்பு கொண்டவர்கள் மீள் குடியேற்ற, புனர்வாழ்வு, சிறைச்சாலை அமைச்சர் சுவாமிநாதன் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பதினாறு எம்பீக்கள் ஆகும்.

எந்த ஒரு தமிழ் அரசியல்வாதியும், இல்லாத மிக நெருக்கடியான, உயிர் அச்சுறுத்தல் நிறைந்த, கடந்த யுத்த காலத்தின் போது, மனித உரிமை போராட்டங்களை நடத்தி, தலைவர் மனோ கணேசன் பெரும் பங்களிப்புகளை வழங்கினார். சர்வதேச விருதுகளையும் பெற்று உலகின் கவனத்துக்கு காணாமல் போவோர் பிரச்சினையை கொண்டு வந்தார். எதிர்காலத்தில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டால், அப்போதும் எமது தலைவர்தான் தெருவில் நின்று போராட போகிறார்.

ஆனால், இன்று ஒப்பீட்டளவில் சமாதானம் நிலவுகிறது. கடந்த காலங்களில் காணாமல் இருந்த தமிழ் அரசியல் தலைவர்கள் நிறையப்பேர் இப்போது தமிழ் அரசியல் பரப்பில் இருக்கிறார்கள்.

 கட்சி இயந்திரம் வேறு, அமைச்சு இயந்திரம் வேறு என்ற நேர்மையான ஒழுக்கத்துடன் கட்சி தலைவராவும், அமைச்சராகவும் தலைவர் மனோ கணேசன் நடந்துகொள்வது இந்த கும்பலுக்கு பிடிக்கவில்லை.    அமைச்சில், அமைச்சரின் அலுவலர் குழுவில் இளைஞர் இணைய அங்கத்தவர்கள் இருவர் கடந்த மூன்று வருடங்களாக சம்பளம் வழங்கப்பட்டு, தொழில் செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு மேலதிகமாக அனைத்து அமைச்சு பதவிகளும் இந்த கும்பல் சிபாரிசு செய்யும் நபர்களுக்கு வழங்க வேண்டும் என நீண்ட காலமாக இவர்கள் கட்சிக்குள் முரண்பட்டுகொண்டு இருந்தார்கள்.

கொழும்பு மாநகரசபை தேர்தலில், கட்சிக்கு கொழும்பு நகர பிரதேசத்தில் எப்போதும் இருந்த வாக்கு வங்கி அப்படியே இம்முறையும் கிடைத்துள்ளது. இது கட்சியின் வாக்கு. இதற்கும் முறைத்தவறி உரிமை கோருவது வரம்பு மீறிய செயலாகும். மாநகரசபைக்கு நியமிக்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் கட்சியின் அரசியல் குழுவால் நியமிக்கப்பட்ட நியமனக்குழுவால் முதற்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதில் இளைஞர் இணையத்தின் செயலாளராகிய நானும் மாநகரசபைக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். தமது சக தோழருக்கு கிடைத்த இந்த நியமனம் தமக்கு கிடைக்கவில்லையே  என்ற வயிற்றெரிச்சலை இங்கே இந்த கும்பல் வெளிபடுத்தியுள்ளது.

தலைவர் மனோ கணேசன் இன்று, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராகவும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சராகவும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சரளமாக கலந்துரையாடி, நாட்டுக்கு உள்ளே தமிழின உரிமைகளை உறுதிப்படுத்தும் அதேவேளையில், சகோதர இனத்தவர்களையும் அரவணைத்து உண்மையான தேசிய ஐக்கியத்தை நோக்கிய பயணத்துக்கு வலு சேர்க்கிறார். இதை இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும், அரசியல் தலைவர்களும், ராஜதந்திரிகளும் அறிவார்கள். இந்த சிறுபிள்ளைத்தனமான கும்பலுக்கு இவை புரியவில்லை. இதனாலேயே இவர்கள் எங்கள் கட்சியையும், தலைவரையும் அழித்து, கொழும்பில் வெற்றிடத்தை ஏற்படுத்தி, அதில் கால் பதிக்க நினைக்கும் மாற்றாருக்கு துணை போயுள்ளார்கள்.

இந்த துரோக கும்பலை புறந்தள்ளிவிட்டு, எமது ஜனநாயக இளைஞர் இணையத்தின் பயணம் புத்தெழுச்சியுடன் எம் தலைவரின் வழிகாட்டலில் தொடரும்” என ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயலாளர், ஜி. விஷ்ணுகாந்த் கருத்து ​வெளியிட்டுள்ளார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .