2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மகாநாயக்கர்களை முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து விளக்குவர்

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன் 

நல்லிணக்கம் சமாதானம் ஆகியவற்றுக்கு பங்கம் ஏற்படாத​ வகையில், தீர்மானங்களை எடுத்துள்ளோம். எமது இராஜினாமாவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன எனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், மகாநாயக்கர்களின் அறிவுறுத்தலுக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும், மகாநாயக்கர்களை சந்தித்து தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.  

நாடாளுமன்றத்தில் நேற்று (06) விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அரசாங்கத்தில் வகித்த அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும், உடனடியாக மீண்டும் தமது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்கவேண்டுமென மல்வத்து, அஸ்கிரிய, ராமஞ்ஞ, அமரபுர ஆகிய நான்கு பௌத்த பீடங்களும் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடம் நேற்று முன்தினம் (05) கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையிலேயே, ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சர்கள் நால்வர், இராஜாங்க அமைச்சர்கள் நால்வர், பிரதி அமைச்சரொருவர் கடந்த 3ஆம் திகதி இராஜினாமா செய்தததையடுத்து, அது உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லையென்று ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளதாகத் தெரிவித்த அவர், நாம் அனைவரும் ஒரே கடிதத்தில் கையெழுத்திட்டே இராஜினாமாக் கடிதத்தைக் கையளித்தோம் என்றார்.  

ஆனால், இராஜினாமா செய்த 9 அமைச்சர்களும் அரசமைப்புக்கு அமைய, தனித்தனியாக இராஜினாமா கடிதங்களைக் கையளிக்க வேண்டும் என, பிரதமர் தெரிவித்ததால் சிலர் தமது இராஜினாக் கடிதங்களை கையளித்துள்ளதுடன், சில அமைச்சர்கள் ரமழான் பண்டிகைக்கு சொந்த இடங்களுக்குச் சென்றிருந்ததால் கடிதங்கள் கையளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

“நாட்டுக்கும், நல்லிணக்கத்துக்கும், இனங்களுக்கும், அமைதிக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எமது முடிவு இருக்காது. இது குறித்து மகாசங்கத்தினருக்குத் தெளிவுபடுத்துவோம்” என்றார்.  

மேலும் முன்னாள் அமைச்சர், ஆளுநர்கள் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும், தாம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுத்து, முடிவுகளை அறிவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .