2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’முதுகில் குத்துவதைப் பற்றி பேச திகாவுக்குக்கு அருகதையில்லை’

Gavitha   / 2020 ஒக்டோபர் 30 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா 

நம்பிக்கைத் துரோகம், முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்த அருகதையும் கிடையாது என்றுச் சாடியுள்ள பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடு அமரர் சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர்தான் திகாம்பரம் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்தமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமரர் பெ.சந்திரசேகரனின் முதுகில் குத்திய திகாம்பரம் அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும்  பின்பு ரணிலின் முதுகிலும்  குத்தியதோடு தற்போது ஆளும் தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருவதாகச் சாடியுள்ளார்.

'இவரால் மேற்கொள்ளப்பட்ட பேரம் பேசலில் ஒரு பிசகல் ஏற்பட்டது. இவர் எதிர்பார்த்தது நடந்திருந்தால் இவரால் முதுகில் குத்தியவர்களின் பட்டியிலில் சஜித் பிரேமதாஸவும் உள்வாங்கப்பட்டிருப்பார்.  டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அனைவரும் ஆளுந்தரப்போடு இணையவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். இதற்கு நான் மட்டும் விதிவிலக்க. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு அடுத்ததாக, மலையக மக்கள் முன்னணியே இரண்டாம் சக்தியாக இருந்தது. ஆனால், கூட்டணி கூட்டணி என்று கூறிக்கொண்டு மிகவும் கபடத்தனமாக, புற்றுநோயைப் போல் எமது பலத்தை சிறிது சிறிதாக சிதைத்தப் பெருமை இவரையே சாரும்' என்றார். 

'மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களையும் அபிமானிகளையும்,  எமது தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களையும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தனது அமைப்போடு இணைத்துக்கொண்ட செயற்பாட்டை மேற்கொண்டவர் இவர். கூட்டணியோடு இணையாமல் இருந்திருந்தால், மலையக மக்கள் முன்னணி தனது பலத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கும். இவ்விடயம் இன்றும்கூட மலையக மக்கள் முன்னணியினரால்  மிகுந்த ஆதங்கத்தோடும், விசனத்தோடும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

 

'மலையக மக்கள் முன்னணி இன்று பகடைக்காயாக மாறியிருக்கியிருக்கின்றது. இதிலிருந்து, காலம் தாழ்த்திய நிலையிலாவது விடுபட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்" என்றார். 

தொடர்ந்துரைத்த அவர், 'கடந்த தேர்தல் பிரசாரங்களின் போது, நான் எமது மக்கள் மத்தியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றேன். எனக்குக் கிடைத்த வாக்குகளில் 10 சதவீதமான வாக்குகள் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்திக்கான வாக்குகளாகும். மிகுதி 90 சதவீதமான வாக்குகளும் அரவிந்தகுமார் என்ற பெயருக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகளாகும் என்று, நான் உறுதியாக நம்புகின்றேன். ஆனால், நான் போட்டியிட்டக் கட்சி வெற்றியடைவில்லை. இந்நிலையில் நான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்னாவது. ஆகையால்தான் எமது மக்களுக்கு சேவையாற்ற அரசுக்கு ஆதரவளித்தேன். 

'ஐந்து வருடங்களுக்கு எதிரணியில் இருந்துகொண்டு மக்களுக்கு வழங்கிய ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது.  ஒருவருக்கேனும் அரச தொழில் வாய்ப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாமல் போய்விடும்.

'நான் மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்தவன். எமது முன்னணியின் மத்திய குழுவிலோ அல்லது அரசியல் உயர்பீடத்திலோ 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை எச்சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளவில்லை. எனவே, எனது மனசாட்சியின்படி எமது மக்கள் நலன்கருதி நான் வாக்களித்தேன். எவரிடமும் ஆலோசனை கேட்க அவசியமும் ஏற்பட்டிருக்கவில்லை' என்றார்.

'நான் ஆளுந்தரப்போடு பேசும்போது, அமைச்சு பதவிகளையோ அல்லது வேறு சலுகைகளையோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், எமது மக்கள் நலன் சார்பான விடயங்களுக்கு, எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு முன்னிலைப்படுத்தி வலியுறுத்தினேன். அதேவேளை, அமைச்சு பதவி ஒன்று கிடைக்குமாயின், அதனூடாக மக்களுக்கு அதிக சேவைகளை மேற்கொள்ள முடியும். எனவே அமைச்சு பதவி கிடைத்தால் அதை எனக்குத் தேவையில்லையென்று நான் ஏன் சொல்ல வேண்டும்' என்றும் கேள்வி எழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .