2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மரண தண்டனை வழங்குவதற்கு பட்டியல் தயார்

Editorial   / 2018 ஜூலை 12 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சின்னசாமி ஷிவானி

பாரிய போதைப்பொருள் வர்த்தக குற்றச்செயல்களில் ஈடுபட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளிகளென இனங்காணப்பட்டோர், விரைவில் மரணத் தண்டனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, “அதற்கான பட்டியல் தயாரிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (11) இடம்பெற்றபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,

பாரிய போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக, அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேனவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கமைய, மரண  தண்டனை விதிக்க அமைச்சரவையில் ஏகமனதாகத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை கொள்கையளவில் தாம் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இவ்வாறு மரண தண்டனையை வழங்குவதால் குற்றச்செயல்களைக் குறைக்க முடியுமெனக் கருதமுடியாதெனவும் தெரிவித்தார்.

எனினும், போதைப்பொருள் வர்த்தகக் குற்றச்சாட்டுகளுக்காக இன்று உலகில் பல நாடுகள், மரண தண்டனை நிறைவேற்றி வருகின்றன. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் மற்றும் பிரேசில் போன்ற நாடுகளைக் குறிப்பிடலாம். அதிகளவில் போதைப்​பொருள் வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறும் பிலிப்​பைன்ஸில் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி, போதைப்பொருளை  ஒழிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பதையும் அமைச்சர் நினைவு படுத்தினார்.

இலங்கையில் பாரிய போதைப்பொருள் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் 19 பேரின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, இவர்களில் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் இன்றி மரண தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவர்கள் குறித்த சரியான முழுமையான  தகவல்கள் அடங்கிய அறிக்கையை, ஜனாதிபதி தன்னிடம் கையளிக்குமாறு நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் பணித்துள்ளார். இதற்கமைய, விரைவில் அவர்களுக்கு மரண தண்டனை அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்கத்தில் ஈடுபடுபவர் குறித்து அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தற்போது போதைப்பொருள் குற்றச்செயல்களுக்கு முதலில் மரண தண்டனை வழங்கி, பின்னர் படிப்படியாக கொலை, பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றச்செயல்களைப் புரிவோருக்கும் மரண தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

அத்துடன், போதைப்பொருள் நடவடிக்கைகளை மிகவும் வெற்றிகரமாக முறியடிப்பதற்கு முப்படையின் நேரடியான  பங்களிப்பை பெற்றுக்கொள்வதன் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக போதைப்பொருள் நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் பணியை மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்காகக் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு முப்படையினருக்கு சட்டமா அதிபரால் சிபாரிசு செய்யப்பட்ட சில அதிகாரங்களை  வழங்கும் வகையில் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விசேட ஒழுங்கு விதிகள் தொடர்பான திருத்தச் சட்டத்தை தயாரிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும்  சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சமர்ப்பித்த ஒன்றிணைந்த ஆவணத்துக்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X