2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’முன்னாள், முன்னாள்... முன்னாளாகவே போகிறார்’

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

 

எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரம், நாடாளுமன்றத்தில் நேற்றும் சூடுபிடித்திருந்த நிலையில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையில், கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனரா? எனக் கேட்ட ஹக்கீம், அக்கூற்றை கூறி முடிப்பதற்குள், தனது ஆசனத்திலிருந்த இரா.சம்பந்தன், கடுந்தொனியில் எதிர்ப்புக் குரல் வெளியிட்டார்.

இந்த நாடாளுமன்றத்திலிருக்கும் மூத்த உறுப்பினர் நீங்களெனச் சம்பந்தனைப் பார்த்துக் கூறிய ஹக்கீம், உங்களுக்காகத் தான் குரல் கொடுக்கின்றேன் எனக்கூறி, உரையைத் தொடர்ந்தார்.

“நாட்டில் இரண்டு பிரதமர்கள் இருந்தனர். அன்றை காலத்தில் வாக்களிப்பதற்கு எங்களுக்கு இடமளிக்கவில்லை. அதன் பிரதிபலனாகத் தான், அவர்கள் அந்தப் பக்கத்தில் (எதிர்க்கட்சியை பார்த்து) இருக்கின்றனர்” என்று, ஹக்கீம் தனதுரையைத் தொடர்ந்த போது, கெஹெலிய ரம்புக்வெல்ல எம்.பி, ஏதோவொன்றை கூறியமையால் இருவருக்கும் இடையில் கடுமையான தர்க்கம் ஏற்பட்டது.

“எதிர்க்கட்சித் தலைவரும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர். மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் ஜனாதிபதியானார். முன்னாள் பிரதமரானார், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகிவிடுவாரா?” என்று கூறுகையில், எதிரணியிலிருந்தவர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

“ஒருவர் வேறொரு கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கின்றாரா, இல்லையா? என்பது தொடர்பில் தேடிப் பார்ப்பதற்கு, எங்களுக்கு உரிமையில்லை. ஆனால், நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது” என்று ஹக்கீம் கூறிய போது, தன்னுடைய நெஞ்சை உயர்த்திய கெ​ஹெலிய ரம்புக்வெல்ல, ஏதோவொன்றை கூறுவதற்கு முயன்றபோது, “உடல் ரீதியாக பலத்தைக் காட்டவேண்டிய அவசியமில்லை, குழம்பவேண்டிய தேவையும் இல்லை” என, ஹக்கீம் கூறிமுடித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .