2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வடக்கு காணிப் பிரச்சினையைத் தீர்க்க ’பணியாளர் சபை​யை உருவாக்கவும்’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கிளிநொச்சி, வன்னி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களிலுள்ள காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க, பணியாளர் சபை ஒன்றை உருவாக்கி, இதற்குத் தீர்வு காணாவிட்டால், 20 ஆண்டுகளானாலும், அந்த மக்களின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டாதென வலியுறுத்திய ஜே.வி.பி, யுத்தத்தால் மனதாக்கத்துக்கு உள்ளாகியிருப்பவர்களை மீட்டெடுப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படாததால், வடக்கில் சமூகப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றனவெச் சுட்டிக்காட்டியது.
வடக்கு மக்களின் பாரம்பரியக் காணிகளை கையகப்படுத்தியுள்ள முப்படையினர், அவற்றை உரிய முறையில் விடுவிக்காமையாலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, இலங்கை விடயத்தில் தலையிடக் காரணமென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்று (14) இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், பாலஸ்தீன நாட்டின் காணிகளைக் கையகப்படுத்தும் இஸ்ரேலுக்கு உதவும் ஐக்கிய அமெரிக்கா, இலங்கையின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றது என்றும் காணிகளை வழங்க வேண்டும் தான், ஆனால், உலகம் முழுவதும் ஒன்​றிணைந்து, இலங்கையை நோக்கி விரல் நீட்டக் காரணம், கொடுக்க வேண்டிய காணிகளை மக்களுக்கு கொடுக்காமையே ஆகுமென்றார்.

வடக்கில் உள்ளவர்கள், ஒருபோதும் அரசாங்கத்தின் காணிகளைக் கோரவில்லை என்றும் அவர்கள், பரம்பரை பரம்பரையாக வசித்துவந்த காணிகளையே கோருவதாகவும் தெரிவித்த பிமல் எம்.பி, யுத்தத்தின் பின்னர் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளைக் கோரி, மாதக் கணக்கில் பொதுமக்கள், சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் யுத்தத்தின் பின்னர்,இராணுவத்தாலும் கையகப்படுத்தப்பட்ட காணிகளையே, பாதிக்கப்பட்ட மக்கள் கோருவதாகக் கூறிய எம்.பி, யுத்தம் முடிந்து 10 வருடங்கள் நிறைவடைந்தும், வடக்கு மக்களின் காணிகள் விடுவிக்கப்படாததால், அம்மக்கள், அரசாங்கத்தைத் தூற்றி வருகின்றனர் என்றும் முப்படையினர் கையகப்படுத்திய காணிகளால், படையினருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“வடக்கில் ஒவ்வொரு சிறிய கிராமத்துக்குள்ளும் இராணுவ யுனிட்டுகள் காணப்படுகின்றன. இதனால், இராணுவப் பிரிவுகளை முகாமைத்துவம் செய்வது கடினமென, இராணுவத் தளபதியுடன் நான் மேற்கொண்ட தனிப்பட்ட கலந்துரையாடல் மூலம் தெரிந்துக்கொள்ள முடிந்தது” என்றும் கூறிய பிமல் ரத்நாயக்க எம்.பி, மன்னார் - சிலாவத்துறை பிரதேசத்திலுள்ள இராணுவ முகாம்கள் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலப்பரப்புக்கு, 212 தமிழ், முஸ்லிம் உரிமையாளர்கள் உள்ளனர் என்றும் 2008இன் பின்னரே, அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டது என்றும், இந்த விவகாரத்தில், பிரதமர் கவனஞ்செலுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

“மதுபாவனை அதிகரிப்பால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதுடன், வன்புணர்வுகள் போன்ற குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளன. மேலும், யுத்ததத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிப்பதற்காக, சிறு வயதிலேயே திருமணம் முடித்ததால், இளம் விதவைகள் பலர் வடக்கில் காணப்படுகின்றனர்.

“வடக்கில், வன்புணர்வுத் திரைப்படத் தொழிற்றுறையொன்று இயங்குகின்றது. வடக்கிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றவர்கள், மீண்டும் இலங்கைக்கு வந்து, பணத்தை வாரியிரைத்து, கிராமத்துப் பெண்களை, விருப்பத்துடனோ விருப்பமின்றியோ வன்புணர்வுகளை மேற்கொண்டு, அவற்றை காணொளிகளாக்கி விற்கும் வர்த்தகமொன்று முன்னெடுக்கப்படுகின்றது. வித்தியாவின் துயரச் சம்பவமும் அப்படிப்பட்டதே ஆகும்.

“வடக்கில் இவ்வாறான பிரச்சினைகள் குறித்து பொலிஸ் நிலையத்திலேயே முறையிட முடியும். ஆனால், வடக்கில் தமிழ்மொழி பேசும் பொலிஸாரின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணும் அளவிலேயே இருக்கின்றது. அதனால், பொலிஸ் துறைக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்ள வேண்டு​ம்” என, பிமல் எம்.பி மேலும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X