2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கை விவகாரங்கள்; நாடாளுமன்றில் குரல் எழுப்ப தமிழக கட்சிகள் முஸ்தீபு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பிரச்சினையை எழுப்ப தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டிருக்கின்றன.

இலங்கைத் தமிழர் விவகாரம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் நடவடிக்கை, பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீவிரமாக எழுப்ப தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

 டி.ஆர். பாலு

இது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தைச்சேர்ந்த டி.ஆர். பாலு கூறுகையில், இலங்கை படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது, இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் தமிழகக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டும் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.

டெசோ கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டு மனித உரிமைகளில் ஈடுபட்ட இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று இரு அவைகளிலும் எங்கள் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்துவர்.
இது தொடர்பாக எதிர்வரும் நாள்களில் திமுகவினர் தீவிரமாக அவையில் பிரச்சினை எழுப்புவர் என்றார்.

அ.தி.மு.க.வின் டாக்டர் வா. மைத்ரேயன்

அ.தி.மு.க.வின் டாக்டர் வா. மைத்ரேயன் கூறுகையில்,பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது, இலங்கைக்கு எவ்விதப் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி அவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளோம். வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்தை ஏற்றுச் செயல்பட கூட்டத்தொடரில் வலியுறுத்துவோம்.

கச்சதீவை மீட்பது, இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களைக் காக்க நிரந்தர நடவடிக்கை போன்றவை குறித்தும் இக் கூட்டத்தொடரில் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்துவர். இந்த விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்து, ராஜ்யசபாவில் எனது தலைமையிலும், லோக்சபாவில் அதிமுக குழுத் தலைவர் தம்பிதுரை தலைமையிலும் எங்கள் கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்புவர் என்றார்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி டி. ராஜா, பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது குறித்து மத்திய அரசிடம் அவையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளேன்.

தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல். திருமாவளவன் கருத்து தெரிவிக்கையில்,இலங்கை கடற்படைக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து அடக்குமுறை நடவடிக்கைகளை அந் நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. அதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவும், தமிழக மீனவர்களைக் காக்கவும் வலியுறுத்தி, வரும் நாள்களில் தொடர்ந்து பிரச்னை எழுப்புவேன். இந்த விஷயத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும் என்றார்.

மதிமுகவின் கணேசமூர்த்தி


மதிமுகவின் கணேசமூர்த்தி கூறுகையில்,தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுநலவாய நாடுகள் கூட்டத்தில் தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இந்தியா பங்கேற்றது. ஆனால், அதன் பிறகும் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து மத்திய அரசு விளக்கவில்லை. அதை வலியுறுத்தி நான் பிரச்சினை எழுப்புவேன் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .