2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை’

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்க கொண்டுவரப்படவில்லை என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள், சமூக அமைப்புகள் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் இஸ்லாமியர்கள் ஒன்றுதிரண்டு பல இடங்களில் தேசியக் கொடிகளுடன் பேரணி சென்றுவருகின்றனர். ஆனால், சிஏஏ யாருக்கும் எதிரானது அல்ல என்று அதற்கு ஆதரவாக பாஜக பேரணிகள் மற்றும் விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் சிஏஏ தொடர்பான கருத்தரங்கம் சென்னை தி.நகரில் இன்று (19) நடைபெற்றது. அதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு சிஏஏ குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய நிர்மலா, “குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்கும் சட்டமல்ல. புதிய குடியுரிமையை வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கவே திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆகவே, இங்கு எந்த குழப்பமும் வரத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.

என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் பழைய நடைமுறைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. 1964 முதல் 2008 வரை 4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. சிஏஏ பற்றி பேசுவோர் அகதிகள் முகாம் பற்றி பேசுவதில்லை. மனித உரிமையை பற்றி பேசாதவர்கள்தான் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேசுகிறார்கள்” என்று விமர்சித்தார். 
மேலும், “பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது” என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .