2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

UNHCR இன் யோசனையிலிருந்து ’இலங்கை விலக வேண்டும்’

Editorial   / 2019 மார்ச் 15 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையானது, அரசியலுக்கு உட்பட்டுள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போது இதிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதாகவும் பிரித்தானியாவின் நேஸ்பி சாம்வரால் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மையான தகவல்கள் மற்றும் ஆய்வைக் கவனத்திற்கொண்டு, அரசாங்கமானது, இலங்கை தொடர்பான யோசனையிலிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

27 (2) நிலையியற் கட்டளையின் கீழ், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள யோசனை குறித்த இலங்கையின் நிலைப்பாடு என்னவென்பது தொடர்பில், நாடாளுமன்றத்தில் நேற்று (14)உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த 40ஆவது அமர்வில் முன்வைக்கப்படவுள்ள யோசனையின் மூலம், இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பைக் குறைவாக மதிப்பீடு செய்து, நாட்டுக்குள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிமன்றத்தை நிறுவும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த, அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டுமென, தான் ஒரு யோசனையை முன்வைப்பதுடன், இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நாடாளுமன்றத்தில் தெளிவுப்படுத்த வேண்டுமெனக் கோருவதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் கோரினார்.

இந்தக் கூட்டத் தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைப்பாடு குறித்து, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்வைத்துள்ள அறிக்கை குறித்துக் கலந்துரையாட, பேரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்த மஹிந்த, அந்த அறிக்கையில், இலங்கை அரசாங்கமானது, இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகள், ஐ.நா உறுப்பு நாடுகளுடன், நிரந்தர ஒத்துழைப்புடன் செயலாற்றி வந்துள்ளமை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தொடர்பில், 2015இல் நிறைவேற்றப்பட்ட யோசனையினூடாக, இலங்கையின் சுயாதீனம், தேசிய பாதுகாப்பு, இலங்கைப் பிரஜைகளின் உரிமைகள், இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகளுக்குத் தீங்கான புதிய சட்டங்கள் பலவற்றை, இலங்கை நாடாளுமன்றத்தினூடாக நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புறத்தில், இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் குறித்த வழக்கு விசாரணைகளுக்காக, இலங்கைக்குள் கலப்பு நீதிமன்றத் கட்டமைப்பை உருவாக்கவும் பேரவையின் உத்தியோகபூர்வ கிளை அலுவலகமொன்றை இலங்கையில் நிறுவவும், இலங்கையின் மனித உரிமைகள் குறித்த நிகழ்ச்சி நி​ரலை, தொடர்ந்தும் பேரவையில் தக்கவைப்பதுமான யோசனையொன்று, இம்முறை கூட்டத்தொடரின் போது, உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்படவுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இந்த யோசனை தொடர்பான ஜனாதிபதியின் நிலைப்பாடும் பிரதமரின் நிலைபாடும் வேறுபட்டதாக உள்ளதென்றும், எவ்வாறாயினும், இந்த யோசனைக்கு இணை அனுசரணை வழங்குவதிலிருந்து, இலங்கை விலக வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .