2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஜெனீவாவில் இலங்கை விவகாரம்; ஒத்திவைத்த விவாதம் இன்று இடம்பெறும்

Editorial   / 2018 மார்ச் 19 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் விசேட கருத்திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம உள்ளிட்ட உயர்மட்டத் தூதுக்குழுவினர், ஜெனீவாவுக்குப் பயணமாகியுள்ளனர்.

அத்துடன், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டோர், புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட பலரும், இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளனர்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், இக்காலக்கிரம மீளாய்வுக்கு உட்பட்ட நாட்டின் பிரதிநிதி மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மாத்திரமே, இந்த விவாதத்தில் உரையாற்ற முடியும்.
இதன்போது, ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அறிக்கையின் பரிந்துரைகள், விரைவாக அமுல்படுத்தப்பட வேண்டுமென, சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பரிந்துரைகளை எவ்வாறு அமுல்படுத்துவதென்பது தொடர்பில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இலங்கையின் சார்பில் இந்த விவாதத்தில் உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவிலுள்ள பணியாளர்கள், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட முழுநாள் வேலைநிறுத்தம் காரணமாக, அன்று நடைபெறவிருந்த விடயங்கள், இன்று (19) இடம்பெறவுள்ளன என அறிவிக்கப்படுகிறது.

இறுதியாக வெளிவந்துள்ள நேர அட்டவணையின்படி, இன்று காலை ஜெனீவா நேரப்படி 9 மணி முதல் 11 மணிவரை, இனரீதியான பாதுபாடு பற்றிய விவாதம் இடம்பெறவுள்ளது. இது, ஐ.நா பொதுச் சபையில் இவ்வாண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதன் பின்னர், முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை, பூகோள காலக்கிரம மீளாய்வு இடம்பெறவுள்ளது. இவ்வாறு பெனின், பாகிஸ்தான், ஸாம்பியா, ஜப்பான், உக்ரைன், இலங்கை ஆகிய நாடுகள் மீதான மீளாய்வு இடம்பெறவுள்ளது.

இலங்கையே இதில் இறுதியாகப் பட்டியற்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை மீதான மீளாய்வு, இலங்கை நேரப்படி இன்றிரவே இடம்பெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த மீளாய்வுகள் தொடர்பான பொது விவாதம், 3 மணி முதல் இரவு வரை தொடரவுள்ளது.
இவை ஒருபக்கமாக இருக்க, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அல்லது ஐ.நா செயலாளர் நாயகம் ஆகியோரின் அறிக்கைகள், வாய்மூல அறிக்கைகள் ஆகியனவும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இவை, நாளை மறுதினம் புதன்கிழமை (21) இடம்பெறவுள்ளன. புரூண்டி, கொலம்பியா, சைப்ரஸ், குவாட்டமாலா, ஹொன்டூரஸ், ஈரான், இலங்கை ஆகிய நாடுகள் பற்றியே, அவ்வாறான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. அறிக்கைகளின் பின்னர், பொது விவாதம் இடம்பெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .