2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இனப்பிரச்சினையை இதய சுத்தியுடன் தீர்க்க உதவுமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 14 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடமலை ராஜ்குமார்

இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு  இதய சுத்தியுடன் உதவுமாறு அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர்களிடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் ஆகியவற்றுக்கான அமெரிக்காவின்  உதவி இராஜாங்கச் செயலாளர் டொம் மலிநோவ்ஸ்கி ஆகியோருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் உள்ளிட்டோருக்கும் இடையிலான சந்திப்பு முதலமைச்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போதே முதலமைச்சர் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தினதும் நாட்டினதும் நடப்பு விவகாரங்கள் பற்றி எடுத்துக்கூறிய முதலமைச்சர், இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் மீது தமிழ் பேசும் சிறுபான்மை இனங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 'மீண்டும், மீண்டும் பாதிக்கப்பட்டு தொடர்ச்சியாக இழப்புக்களைச் சந்தித்த இந்;த மக்களின் அமைதி வாழ்வுக்கான நம்பிக்கை வீண் போகாத வகையில் சமாதான முன்னெடுப்புகளை நோக்கி நகரும் இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் அமெரிக்கா பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதை கிழக்கு மாகாண மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர' என்றார்.

'இனவாதிகளை ஒடுக்குவதற்கும் நாட்டில் சமாதானத்தின் கரம் ஓங்கச் செய்வதற்கும் இதுவே தக்க தருணம் ஆகும்.   
இதய சுத்தியற்ற தேசிய மற்றும் சர்வதேச சமாதான முன்னெடுப்புகளால் இந்த நாட்டு மக்கள் இனியும் இழப்புகளைச் சந்திப்பதற்கு இடமளிக்கக்கூடாது.

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவந்த யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அகதிகளான மக்களின் மீள்குடியேற்றத்தில் மேலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுனாமியாலும் மற்றும் பெருவெள்ளம், வரட்சி போன்ற இயற்கை இடர்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முறையான வாழ்வாதாரத் திட்டங்கள் வெற்றி அளிக்காத நிலைமை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் குறைந்தபட்சம்  நிம்மதியாக கால்நீட்டித் தூங்க ஒரு வீட்டையாவது கொண்டிருப்பது அவசியம் ஆகும். எனவே அதற்குத் தோதான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அமெரிக்காவிடமிருந்து கிழக்கு மாகாண சபை உதவியை எதிர்பார்க்கிறது' என்றார்.

'மேலும், இனப்பிரச்சினைத் தீர்வின் ஓர்  அங்கமாக அரசியல் திருத்தத்தின் மூலம் அதிகாரப்பகிர்வாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைக்குரிய அதிகாரங்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு இன்னமும் கிடைக்காமல் உள்ளமை  பல வழிகளில் அபிவிருத்திக்குத் தடையாக இருக்கின்றது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X