2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் வாழவேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ்

 

கிழக்கு மாகாணத் தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு தலைமைத்துவமும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தலைமைத்துவமும் உருவாக வேண்டுமென வலியுறுத்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா, இதற்காக, முஸ்லிம் சமூகம் ஒரு கட்சியின் கீழ் ஒன்றுபடுவதும், தமிழ்ச் சமூகம் மற்றுமொரு கட்சியின் கீழ் அணிதிரள்வதும், காலத்தின் தேவையாகுமென்றும் கூறினார்.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமா, இல்லையா என்பதை, கிழக்கில் உள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் பேசித் தீர்மானின வேண்டுமெனக் கூறிய அவர், இந்த மாகாணத்தில், தமிழர்களும் முஸ்லிம்களும் பூர்வீகக் குடிகளென்றும் அவர்களோடு இணைந்து சிங்களவர்களும் வாழவேண்டுமென்றும் கூறியதோடு, எவரும் எவரையும் ஒதுக்கி வாழ்வதன் மூலம், இந்த மாகாணத்தில் நிலையான சமாதானத்தை எட்டிவிட முடியாதென்றார்.

கட்சியின் புனரமைப்பு பணிகள் நிமித்தம், திருகோணமலை மாவட்டத்துக்கு வருகைதந்த அதாவுல்லா, நேற்று முன்தினம் (10) இரவு, மூதூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், முஸ்லிம்களும் தமிழர்களும் மோதிக்கொள்வதால், பிரச்சினைகளைத் தீர்த்துவிட முடியாதென்று எடுத்துரைத்த அவர், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்க, புதிய வடிவிலான  கலாசார, பண்பாட்டு ரீதியான  பிரச்சினைகளை, வெளிச்சக்திகள் தோற்றுவித்து வருகின்றனவென்றும் ஆட்சியை மாற்றுவதற்காக, வரலாற்றில் புதிய வடிவில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்ற இந்த நிகழ்ச்சி நிரல், காலங்காலமாக இடம்பெற்று வருகின்றதென்றும் கூறினார்.

தமிழர் விடுதலைப் போராட்டம், இன்று வெளிநாட்டுச் சக்திகளின் கைகளுக்கு மாற்றப்பட்டு, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றதெனக் குற்றஞ்சாட்டிய அதாவுல்லா, கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், காணிப், மீன்பிடி, மேய்ச்சல் தரை, விறகு, மணல் ஏற்றுதல் எனப் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனரெனவும் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் கிராமங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .