2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார், ஒலுமதீன் கியாஸ், ஏ. எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட உப்பாறு கிராமத்தில் இருந்து 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்தவர்களில் 58 குடும்பங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க உயர்தானிகர் அதுல் கேசாப், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ ஆகியோர் கலந்து கொண்டு காணி உறுதி பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

காணி சீர்திருத்த ஆணைக்குவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடுகளில் இருந்து 124 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 1990ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர் பதிவாகி இருந்த 58 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு முதல் கட்டமாக இவ் உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தலா 10 பேர் காணிகள் தலா 5,000 ரூபாய் வீதம் வழங்கி வைக்கப்பட்டது. 

இவர்கள் ஒவவொருவருக்கும் அரசாங்கத்தால் காணிகளை துப்பரசு செய்வதற்கு 25,000 ரூபாயும் மீள்குடியேற்றத்திற்கு 150,000 ரூபாயும் வழங்கி வைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர்:

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட்,

நல்லாட்சியிலும் கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றம் என்பது ஒரு புறக்கனிக்கப்பட்ட விடயமாக இருந்து வருவது கசப்பான உண்மையாகும்.

30 வருட கால கொடிய யுத்தத்தால் தங்களுடைய சொந்த நிலங்களை விட்டும் வெளியேறி அகதிகளாக இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களைக் குடியேற்றி அவர்கள் வசித்து வந்த நிலங்களை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவது வேதனையைத் தருகிறது.

எனவே, அவற்றைத் துரிதப்படுத்தி அவர்களுடைய வாழ்க்கையை மறுசீரமைக்க வேண்டிய தேவைப்பாடு எம் எல்லோருக்கும் உள்ளது. ஜனாதியதியினதும் பிரதமரினதும் நேரடி தலையீடு, எதிர்காலத்தில் காணி மற்றும் மீள்குடியேற்றம தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என நினைக்கிறேன்.

தொழில் இல்லாப் பிரச்சினையே கிழக்கு மாகாணம் எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாக இருக்கின்றது. இலட்சக்கணக்கான இளைஞர், யுவதிகள் இங்கே வேலையற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் தொழில் பேட்டைகளை அமைத்து முதலீடு செய்வதற்கு அமெரிக்கா முன்வர வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்திலும் அபிவிருத்தியிலும் நாங்கள் அதீத கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர்:

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அடெல் ஹெசாப் உரையாற்றகையில்,

இலங்கையில் நிலையான ஜனநாயகத்தையும் உறுதியான நல்லினக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அதீத  அர்ப்பணிப்புடன் அர்த்தமுள்ள பாதையில் நோக்கிப் பயணிக்கும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் செயல்பாட்டிற்கு அமெரிக்கா என்றும் முழுமையாக ஒத்துழைப்பு  வழங்கும்.

இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு மனித உரிமைகள் தொடர்பாக சிறந்த சமிஞ்கைகள் வெளிக்காட்டப்படுவது அவசியமாகும். அதற்காகான காலமும் நேரமும் இப்போது கனிந்து வருகின்றது. அபிவிருத்திக்கான சிறப்பான பயணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. இலங்கையின் அபிவிருத்திக்கு அமெரிக்கா நிதி உதவி மட்டுமன்றி தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் வழங்குவதற்து தயாராகவுள்ளது.

 நீண்ட காலமாக அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வரும்  இலங்கை ஆசியாவிலே பொருளாதார அபிவிருத்தி அடைந்த சிறந்த நாடாக ஆக்குவதற்கு அனைத்து வளங்களும் பெற்றிருக்கின்றன. மனிதாபிமானம் இப்போது மேம்பட்டிருப்பது அபிவிருத்திக்குத் தேவையான சிறப்பான குறிகாட்டியாகும்

இங்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணங்களை வழங்கி ஒரு முழுமைபெற்ற மீள்குடியேற்ற கிராமமாக இதனை மாற்றியமைப்பதற்கு நடவடிக்ககை எடுப்போம். இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் முழுமையான ஆதரவைத் தருவார் என நம்புகிறோம்.

அவரது ஆதரவினால் இப்போது 58 குடும்பங்களுக்கு முதலாம் கட்டமாக இந்த அரச காணிகள் பகிர்தளிக்கப்படுகின்றன. இவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்வதற்கு ஒரு குடும்பத்துக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னர் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீட்டு நிர்மாணத்துக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .