2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்'

Thipaan   / 2016 ஜூலை 16 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

திருகோணமலை சாம்பல் தீவு சந்தியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். நீண்டகாலத்துக்குப் பின்னர் இந்த நாட்டில் சிறுபான்மை மக்களும் இணைந்து  நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது வேதனையான விடயமாகும் பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் ஆலயங்களை அமைப்பது நல்லிணக்கத்துக்குக் குந்தகமான விடயமாகும்.

என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டமான திருகோணமலையில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மௌனம் காத்து வந்த நிலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவ்விகாரம் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு இதுவரையிலும் எவ்வித நன்மைகளையும் செய்யவில்லை. எனினும், இப்பௌத்த விகாரை அமைப்பதில் அரசாங்கத்துக்கு நேரடி தொடர்பு எதுவும் கிடையாது என நான் நம்புகின்றேன்.

மாறாக இது ஒரு சிலரின் திட்டமிட்ட செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. குறித்த இடத்தில் உள்ள பஸ்தரிப்பு நிலயம் இராணுவத்தினர் விடுவித்தன் பின்னர், மக்கள் பயன் பாட்டுக்காகத் துப்புரவு செய்யப்பட்ட நிலையில், கடந்த 10.07.2016 அன்று இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. 

கடந்த காலத்தில்  திருகோணமலை பிரதான பஸ் நிலயத்தில் இவ்வாறான சிலை ஒன்று வைக்கப்பட்டதானால் எழுந்த நிலமையால் மாவட்டத்தில் மக்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது.

குறித்த காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அமைச்சராக இருந்தார். அவரும் இன்னும் சிலரும் இங்கு வருகைதந்து நிலமைகளை அவதானித்து சில நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

இது மட்டுமன்றி அந்த விடயம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதனால், குறித்த சிலையை வழிபாட்டுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது இன்றும் நடமுறையில் உள்ளது.

இந்நிலையில், சாம்பல்தீவு விவகாரம் மீளவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குச்சவெளிப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், குச்சவெளியிலுள்ள 14 விகாரைகள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இது, புல்மோட்டை, அரிசிமலை மற்றும் தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பல  இடங்களில் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. இவ்வாறு பௌத்த மக்கள் இல்லாத இடங்களில் ஆலயங்களை அமைப்பது நல்லிணக்கத்துக்குக் குந்தகமான விடயமாகும்.

பௌத்த மக்கள் உள்ள இடங்களில் அமைப்பது தேவையான ஒரு விடயம்தான். அந்த மக்கள் வழிபட வேண்டும். அவ்வாறு இல்லாத இடங்களில் அமைப்பது ஏனைய மக்களின் மனங்களைப்புண்படுத்தும் விடயமாகும். இவ்வாறான விடயங்களை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது. இவை எந்தவித அனுமதி அங்கிகாரமின்றி செய்யப்படுகின்றன' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .