2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெளிமாவட்டத்தவரின் மணல் அகழ்வால் இழக்கப்படும் வயல் காணிகள்

Thipaan   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தீனேரி மற்றும் கண்டல்காடு ஆகிய பிரதேசங்களினூடாக ஓடுகின்ற ஆற்றில், வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மணல் அகழ்வில் ஈடுபடுவதனால், இரு பிரதேசங்களிலுமுள்ள ஆயிரக்கணக்கான  ஏக்கர்  வயல் காணிகளை எதிர்காலத்தில் இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என இப்பிரதேச விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆற்றின் ஒரு பக்கத்தில் தீனேரி வயல் வெளியும் மறு புறத்தில் கண்டல்காடு வயல் வெளியும்   இருக்கின்றன. இந்த இரு ஓரங்களிலும் மண் அகழப்படுவதால், வயல் நிலங்கள் ஆற்றுக்குள் செல்கின்றன. கடந்த யுத்த கால சூழ்நிலையால், கைவிடப்பட்டிருந்த இப்பிரதேச விவசாயத்தை, யுத்தம் முடிந்த பின்னர், கடந்த ஏழு வருடங்களாகச் செய்து வருகின்றனர்.

2014ஆம் ஆண்டிலிருந்து இங்கு மண் அகழ்வு இடம்பெற்று வரும் நிலையில், இவற்றைத் தடுத்து நிறுத்துமாறு 2015ஆம் ஆண்டு அப்போது கிண்ணியா பிரதேச செயலாளராக இருந்தவரிடம் விவசாய சம்மேளனம் விடுத்த கோரிக்கைக்கு இனங்க நிறுத்தப்பட்டது.

ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட படகுகள் மண் அகழ்வில் இரவு பகலாக ஈடுபடுகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பர் வாகனங்கள் மணல் அகழ்வுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களே மண் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.

இது தொடர்பாக பல முறை  கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு அறிவித்தும் இவர்களுக்கெதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது  ஏன் என, விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த விடயம் குறித்து கிண்ணியா பிரதேச காணி உத்தியோகத்தரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, 'மண் அகழ்வுக்கான அனுமதியைக் கொடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் பிரதேச செயலகத்தால் முடியா, புவி சரிதவியல் திணைக்களமே இதனைச் செய்ய வேண்டும்.

வெளி மாவட்டத்தவரே, இங்கு மண் அகழ்வில் இடுபடுகிறனர். இதனால் இப்பிரதேசத்தில் 2,500 ஹெக்டேயர் மேற்பட்ட விவசாய நிலங்கள் அழிந்து போகக் கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தி, விவசாயிகளின் கோரிக்கை அடங்கிய மகஜரை, 2016.08.01 ஆம் திகதி மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளோம்' என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .