2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கணவரை இழந்த கிழக்கு பெண்கள் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளை எதிர்க்கொள்கின்றனர்: நெப்சோ

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் (நெப்சோ) மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் சம்மேளனம் அண்மையில் திருகோணமலை, நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கணவரை இழந்த குடும்பத் தலைவிகளை பலப்படுத்துதல் மற்றும் அவர்களின் வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 10 கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் போது கணவரை இழந்த 377 பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மேற்படி இயக்கம் சுட்டிக்காட்டியது. 

திருகோணமலை மாவட்டத்துக்குட்பட்ட லவ்லேன், கிளிகுஞ்சுமலை, விளாங்குளம், முத்துநகர், கரைமலைஊற்று, மனையாவளி, பூம்புகார், சல்லி, வீரநகர் மற்றும் கப்பற்றுறை போன்ற 10 கிராமங்களே மேற்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலமாக நிலவிய யுத்தம், விபத்துக்கள் மற்றும் நோய்வாய்ப்படல் போன்ற காரணங்களால் மேற்படி பெண்கள் தங்களது கணவர்மாரை இழந்துள்ளனர் என்று மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் சம்மேளனம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 171 பெண்களில் சுமார் 40பேரின் கணவர்மார் காணாமல் போயுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'கணவரை இழந்த பெண்கள், அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இப்பெண்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து இவர்களும் இவர்களின் பிள்ளைகளும் கௌரவமானதொரு வாழ்க்கையை சமூகத்தில் ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் அரசியல் தலைமைகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மேற்படி இயக்கத்தின் மகளிர் பிரிவு இணைப்பாளர் லவீனா ஹசந்தி தெரிவித்தார்.

இந்த விபரங்களை அறிந்து தனது கவலையை தெரிவித்துக்கொண்ட பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமேயின் செயலாளர் சிந்தக்க விஜேவர்தன, 'மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், 2013ஆம் ஆண்டில் இடம்பெறும் திவிநெகுமவினூடாக இப்பெண்கள் அனைவரதும் குறைபாடுகள் தீர்த்து வைக்கப்படும்' என்று உறுதியளித்தார். (மெலனி மானெல் பெரேரா)





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .