2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

முஸ்லிம்களைப் புறக்கணித்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்: இம்ரான்

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டு திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த 16ஆம் திகதி நடைபெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை வழமைக்கு மாறாக மாலை 3.00 மணிக்கு நடத்தியமையானது ரமழான் மாத காலத்தில் முஸ்லிம்களை திட்டமிட்டு புறக்கணித்த ஒரு செயலாகும்.

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவில் ஒரு முதலமைச்சர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர்கள் மூவர். ஐந்து உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் எனப் பல முஸ்லிம்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் புனித ரமழான் மாத நோன்பு நோற்றிருந்த வேளையில் நோன்பு திறப்பதில் சங்கடங்களை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டமை மிகுந்த வேதனையைத் தருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். எனினும் இவர்களைச் சிறிதளவேனும் கணக்கிலெடுக்காது இந்த அரசாங்கம் செயற்படுகின்றமைக்கு இதனைத் தவிர வேறு ஆதாரங்கள் எவையும் தேவையில்லை.

இது குறித்து முஸ்லிம்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இருக்கின்றார். எனினும், அவருடன் கலந்துரையாடாது அவரைப் புறக்கணிக்கும் வகையில் இந்த கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டமை மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

அன்றைய தினம் மாலை 7.00 மணி வரை இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் இப்தாருக்காக இடையில் வெளியேறிவிட்டனர். எனினும், முஸ்லிம்கள் எவரும் இல்லாத நிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றுள்ளது.

அங்கு என்ன பேசப்பட்டது, என்ன தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்ற விபரம் முஸ்லிம்கள் யாருக்கும் தெரியாது. எனவே, இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்களில் சிறிதளவேனும் அக்கறையில்லை என்பது இதிலிருந்து புலனாகின்றது.

முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்று அடிக்கடி மார்தட்டிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இதெல்லாம் முஸ்லிம்களின் உரிமை மீறலாகத் தெரிவதில்லை.  அவர்கள் இது குறித்து இதுவரை வாய் திறக்கவே இல்லை. என்பதும் எம்மை மேலும் சிந்திக்க வைத்துள்ளது.

எனவே, இது போன்ற விடயங்களை வடக்கு, மத்திய, வடமேல் மாகாண முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் காலங்களில் இதற்கு பாடம் கற்பிக்கும் வகையில் செயற்பட வேண்டும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X