2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பு: மனுவுக்குத் திகதி குறிப்பு

Thipaan   / 2017 செப்டெம்பர் 07 , மு.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபையால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளுக்கான தினமாக, டிசெம்பர் 13ஆம் திகதியை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (06) நிர்ணயித்தது. 

படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என்று, சிங்கள ஜூரி சபையால் தீர்மானிக்கப்பட்டமைக்கு அமைய, 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் திகதி அவர்கள் அறுவரையும் அனைத்துக் குற்றங்களில் இருந்தும் விடுவிப்பதாக, அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சவுசிரிகெதர நிஷாந்த, என்.எம்.அஜித் சிசிர குமார, எம்.பி.கபில தர்ஷன, எச்.எம். அபேசிங்க, பவரம் ஜேடிகே உபசேன, ஹிட்டி பண்டார அபேசிங்ககே ஹிட்டி பண்டார ஆகியோரே விடுவிக்கப்பட்டனர். 

ஜூரிகள் சபையின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக, சட்டமா அதிபரால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

பிரதிவாதிகள், குற்றம் செய்துள்ளமை வாதங்களின் போது சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படப்பட்டுள்ள போதும், அநுராதபுரம் மேல் நீதிமன்ற ஜூரிகள் சபை, அவர்கள் குற்றமற்றவர்கள் என, தீர்மானித்துள்ளது என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

நீதியரசர்களான தேவிகா தென்னகோன், எஸ்.துரைராஜா ஆகியோரடங்கிய அமர்வு முன்னிலையில், மனு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்குறிப்பிட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

திருகோணமலை, தெஹியத்த இராணுவ முகாமில், குறித்த இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்த போது, 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில், மூதூர் - கிளிவெட்டி குமாரபுரத்தில் இந்தப் படுகொலையை மேற்கொண்டுள்ளனர் என, அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  

20 வருடங்களுக்கு முன்பு, இரவு வேளையில், இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 25 பேர் காயமடைந்தனர்.  

இந்த படுகொலை வழக்கில் தெஹியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில், இருவர், வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே உயிரிழந்து விட்டனர். 

1996ஆம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் குறித்த அவர்கள், சாட்சிகளினால் அடையாளம் காணப்பட்ட நிலையில், திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டிருந்தது.  

அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பிரதிவாதிகளின் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்புக் கருதி சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த வழக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. 

பின்னர், பிரதிவாதிகளின் வேண்டு கோளுக்கமைய சிங்கள ஜூரி சபையின் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்று, 2016 ஜூலை மாதம் 27ஆம் திகதி, இராணுவீரர்கள் அறுவரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .