2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யாழ். புகையிரத நிலையம் இன்று எங்களைப்போலவே ஊனமாக இருக்கிறது

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

''யுத்த காலத்தில் செத்திருந்தால் இந்நேரம் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குற்றுயிராய் குறைவாழ்க்கை வாழ்வெதெல்லாம் மற்றவர்க்கு வேடிக்கைதான். ஏன் இந்த யுத்தம் நடைபெறவேண்டும்… நாமெல்லாம் எதற்காக மற்றவர்க்கு வேடிக்கையாக வேண்டும்… ஆண்டவனும் எம்மை கைவிட்டு விட்டான் இந்நாட்டை ஆண்டவர்களும் நம்மை கைவிட்டு விட்டார்கள்'' என்று மனமுருகி ஆதங்கப்படுகிறார்கள் உடைந்துபோன யாழ். புகையிரத நிலையத்தின் முன்னால் தற்காலிகமாக குடியிருக்கும் ஏழை குடும்பமொன்று.

''1991ஆம் ஆண்டினை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. இளம்வயது, எத்தனையோ கற்பனைகள். சிறகடிக்கும் மனதோடு மாந்தோட்ட பூப்போல சிறகடித்த காலமது. இக்காலத்தில்தான் யுத்தத்தின் கோரத்தாண்டவம் தலைவிரித்தாடியது. 'ஷெல்' சத்தங்கள்தான் எங்களை துயிலெழுப்பும். குண்டுச்சத்தங்கள் கேட்காத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சிறகடித்து பறக்கவேண்டிய வயதில் சிறகுடைத்து வைக்கப்பட்டோம். என்ன இந்த வாழ்க்கையென ஆண்டவனையும் ஆண்டவர்களையும் திட்டாத நாட்களே கிடையாது.

இப்படி எமது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கும்போதுதான் அந்த துயரமான சம்பவத்தினை நான் எதிர்கொண்டேன். வழமைபோல ஷெல்கள் கூவிக்கொண்டிருந்தன. எமது ஊரான யாழ்ப்பாணம் வசாவிளான் அல்லோலகல்லோல பட்டுக்கொண்டிருந்தது. எங்கும் கூக்குரல். சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை தலை தப்பினால் போதுமென கால்போன போக்கில் ஓடத் தொடங்கினர். நானும் ஓடினேன். ஒருகட்டத்தில் எங்கிருந்தோ வந்த ஷெல் எனக்குக் கிட்ட வந்து வீழ்ந்து வெடித்தது. ஷெல் வெடித்துச் சிதறியதில் எனது கால்களும் கை விரல்களும் சேர்ந்து சிதறிவிட்டன.

பட்டாம் பூச்சியாய் பறக்கவேண்டிய என் இளமைப் பருவம், பட்டமரமாய் ஆகியதெண்ணி வற்றும்வரை கண்ணீர் சிந்தினேன். காலங்கள் கவலையுடனே கரைந்தன. என் சொந்தங்களும் என்னை வெறுக்கத் தொடங்கின. 'ஊனம்' என்ற போர்வையில் நான் துரத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு ஜீவனாகி இன்று இவ்விடத்தில் கரையொதுங்கியிருக்கிறேன்...'' என கண்களில் கண்ணீர் மல்க தனது கசப்பான நினைவுகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார் திருமதி. ஜெயரூபி. இவருக்கு இப்பொழுது வயது 43. நான்கு வயதில் கவிதா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருக்கிறது.

குதூகலக் குடும்பமாக வாழவேண்டியவர்கள் குடிசைக்குள் முடங்கியிருக்கிறார்கள். ஜெயரூபிதான் இப்படியென்றால் அவரது கணவன் ஜெயலிங்கத்திற்கும் கால் ஒன்று இல்லை. அவருக்கு இப்பொழுது வயது 46. இவரது காலும் யுத்தத்தின் கொடுமையினால்தான் துண்டிக்கப்பட்டதோ என்று தெரியாமல் வினவினோம். அவரது கதை வித்தியாசமாக இருந்தது.

''1996ஆம் ஆண்டு ஒரு விபத்தின் என்னுடைய கால்களை இழந்தேன். எதிர்பார்க்காத வாகன விபத்து அது. அன்றுமுதல் நானும் ஊனம் என்ற போர்வையில் சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட்டேன். இந்நிலையில் ஒருநாள் நான் யாழ்ப்பாணப்பகுதிக்கு வந்திருந்தபோது என்னைப்போல் ஊனமான ஜெரூபியை சந்தித்தேன். அவரும் சமுதாயத்தினால் ஒதுக்கப்பட்டு, தெருவில் இருந்ததைக் கண்டபோது என் மனது கனத்தது. பார்த்தவுடனேயே எனக்கு ஜெயரூபியைப் பிடித்துவிட்டது. அவரிடம் என்னுடைய விருப்பத்தினை தெரிவித்தேன். முதலில் தயங்கிய அவர், பின்னர் ஒருவாறு என்னுடைய உணர்வுகளை புரிந்துகொண்டார்.

2002ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்தோம். நான் ஜெயரூபியை மணம் முடித்ததும் என்னுடைய நெருங்கிய சொந்தங்கள் என்னை ஒதுக்கிவைத்தனர். என் மனைவியையும் அவரது நெருங்கிய சொந்தங்கள் ஒதுக்கி வைத்தனர். இதனால் இருவரும் யாழ்ப்பாணத்தில் பாழடைந்த ஒரு வீட்டில் தற்காலிகமாக இருந்தோம். யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த ஒரு முஸ்லிமிற்கு சொந்தமான வீடது. முஸ்லிம் மக்கள் யாழ்ப்பாணத்தில் இல்லாததால் எங்களால் அவர்களின் வீடொன்றில் தங்கியிருக்க முடிந்தது. அங்கிருக்கும்போது முறுக்கு செய்து கடைகளில் விற்பனை செய்துவந்தோம்.

காலம் கடந்தது. 2006ஆம் ஆண்டு எங்களுக்கு ஒரு செல்லப்பொண்ணு பிறந்தாள். அவள் பெயர் கவிதா. பெயரைப்போலவே கவித்துவமானவள். உடலாலும் உள்ளத்தாலும் உடைந்துபோயுள்ள எங்களுக்கு கவிதாவின் முகம்தான் முழுநேர உணவு. ஒருவேளை சாப்பாட்டிற்கு எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தோம் என்பது எமக்குத்தான் தெரியும். ஊனம் உடலில் இருந்தாலும் உள்ளத்தில் எமக்கும் ஆசையிருக்கிறது. குழந்தையை பெற்றுவிட்டோம்... வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தால்தான் தெரியும். ஆனாலும் எவ்வளவுதான் கஷ்டமிருந்தாலும் எங்கள் பிஞ்சின் முகம் பார்த்தால் இனம்புரியாத உலகில் எம்மனம் சஞ்சரிக்கிறது.

குருவிக்கூடுபோல் சிறிதாக அமைந்த எம்வாழ்க்கை யுத்தம் முடிவடைந்த பின்னரும் சீரடையத் தொடங்கியதுதான் வேதனையானது. யுத்தம் இருக்கும்போதும் பல பிரச்சினைகள்... யுத்தம் முடிந்தபின்னரும் பல பிரச்சினைகள். இந்த உலகத்தின் பாவப்பட்ட ஜென்மங்களாக பிறந்துவிட்டோம் அனுபவித்துத்தானே ஆகவேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் முஸ்லிம்கள் வரத் தொடங்கினார்கள். நாங்கள் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரரும் வந்திருந்தார். அவர்களுக்கு நாங்கள் இருந்த வீடு தேவைப்பட்டதால் நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம்.

கால்களும் இல்லை, மனதில் திடமும் இல்லை… எங்கே செல்வதென்று தெரியாமல் திண்டாடிய எமக்கு உடைந்துபோன யாழ்ப்பாண புகையிரத நிலையம் புகலிடம் வழங்கியது. ஒரு காலத்தில் சனநெருக்கடிமிக்க புகையிரத நிலையம் இன்று எங்களைப்போலவே ஊனமாக இருக்கிறது. இங்குதான் நாங்கள் மீண்டும் வாழத் தொடங்கினோம். அங்கும் பல பிரச்சினைகள். நாங்கள் தப்பான தொழில் செய்வதாகக்கூறி அதிகாரிகள் கண்டித்தார்கள். செய்வதறியாது திகைத்தோம். அவர்களை பகைத்துக்கொள்ளும் சக்தி எங்களுக்கு இல்லை. உடைந்த கட்டடத்தில்கூட எங்களால் நிழலாற முடியவில்லை. இறுதியாக அமைச்சர் ஒருவரிடம் முறையிட்டோம். அவர்தான் எங்களுக்கு உதவிசெய்தார். புகையிரத நிலையத்தின் முன்னால் எங்களுக்கு சிறிய குடிசை போட்டுக் கொடுத்தார். இப்பொழுது இங்குதான் இருக்கிறோம்.

எங்களினால் தொழில் செய்ய முடியவில்லை. அநாதைகளாக நடுத்தெருவில் நிற்கிறோம். எந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோமோ அந்த யுத்தத்தினை இல்லாதொழித்த படைவீரர்கள் எங்களுக்கு சாப்பாடு தருகிறார்கள். புகையிரத நிலையத்தினை பார்க்க வருகின்றவர்களும் எங்கள் நிலையறிந்து உதவிசெய்கிறார்கள். யாழ். கோட்டை முன்பாக வழமையாக நாங்கள் இருந்தால் படைவீரர்கள் காசு சேர்த்து எமக்குத் தருகிறார்கள். எப்படியோ வாழவேண்டும் என கனவுகண்ட நாங்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

'ஊனம்' என்ற அனுதாபத்தில் பணத்தினை வாங்குவது மனதுக்கு சங்கடமாக இருக்கிறது. அரைப்பரப்பு நிலமிருந்தால்கூட எங்களினால் உழைத்து வாழமுடியும். அந்த உதவிக்காக காத்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் விடிவுகாலம் எப்போது உதயமாகுமென காத்திருக்கிறோம் என்று உணர்வுகளால் ஈட்டியாக குத்துகிறார் ஜெயலிங்கம்.

ஏன் இந்த யுத்தம் நடைபெற்றது என்ற நியாயங்களை மறந்து, இப்படியாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலை பற்றி சிந்திந்தால் பல கேள்விக்குறிகள் எம்முன்னே தோன்றுகின்றன. அனுபவிக்க முடியாத கஷ்டங்களை அனுபவித்து வருகின்ற இந்த தம்பதிகளின் விடிவுகாலம் எப்போது பிறக்குமென மனம் கலங்கியவாறே திரும்பியபோது... ஒன்றுமே அறியாத அந்த நான்கு வயது பிஞ்சு வஞ்சமில்லாமல் புன்னகைத்தது…

-மதுமதி

Pix: Kushan Pathiraja


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .