2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'அரையிறுதிக்குச் செல்ல எமக்குத் தகுதியில்லை'

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 23 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருந்த நிலையில், அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு அவ்வணிக்குக் கிடைத்தாலும், அரையிறுதிக்குச் செல்வதற்கு பாகிஸ்தான் அணிக்குத் தகுதி கிடையாது என, அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸ் தெரிவித்துள்ளார்.

சந்திகாரில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி, ஷர்ஜீல் கான் 25 பந்துகளில் பெற்ற 47 ஓட்டங்களின் துணையோடு, 5.2 ஓவர்களில் 53 ஓட்டங்களுடன் காணப்பட்ட போதிலும், அதன் பின்னர் தடுமாறி, இறுதியில் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.

அணியின் இளம் வீரரான உமர் அக்மல், பின்வரிசையைவிட முன்வரிசையில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பு வேண்டுமெனப் பகிரங்கமாகவே கோரிவந்ததோடு, அஹமட் ஷெஷாத், ஆசியக் கிண்ணப் போட்டிகளுக்கான குழாமில் சேர்க்கப்படாததையடுத்து, பகிரங்கமாகவே விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்த வக்கார் யுனிஸ், 'தாங்கள் விரும்பிய இடத்தில் துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைக்கவில்லை எனச் சத்தமிட்டவர்களுக்கு, இது சிறப்பான வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் பொருத்தமானவர்கள் அல்லர். நீங்கள் விரும்பியதெல்லாவற்றையும் அழலாம், நீங்கள் கதைப்பதெல்லாவற்றையும் கதைக்கலாம், நாங்கள் பொருத்தமானவர்கள் அல்லர்" என்றார்.

8.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்களுடன் காணப்பட்டபோது ஜோடி சேர்ந்த உமர் அக்மல், அஹமட் ஷெஷாத் இருவரும், 4 ஓவர்களில் 20 ஓட்டங்களை மாத்திரமே இணைப்பாட்டமாகப் பகிர்ந்து, அணியின் வாய்ப்புகளைக் குறைத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே, 5ஆம் இலக்கத்தில் ஷகிட் அப்ரிடியைக் களமிறங்கியதாக, வக்கார் யுனிஸ் தெரிவித்தார். 'அந்தத் தர்க்கம் சரியானது என நினைத்தேன். நீங்கள் பார்த்தீர்களானால், 8ஆவது ஓவரிலிருந்து 15ஆவது ஓவர் வரை, நாங்கள் நகரவேயில்லை. இளைய வீரர்கள், வளர்ந்துவரும் வீரர்கள் எனச் சொல்லப்படுகின்ற இருவர், போட்டியை எதிரணியிடமிருந்து எடுத்துச் செல்லக்கூடிய நேரம் எனக் கருதிய நேரத்தில் துடுப்பெடுத்தாடினர்" எனத் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் தோற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ள போதிலும், அவ்வணிக்கு இன்னமும் சிறியளவான வாய்ப்புகள் உள்ளதை ஞாபகப்படுத்திய போது பதிலளித்த வக்கார், 'நீங்கள் அவ்வாறு சொன்னால், நாம் இன்னும் நம்பிக்கையுடன் இருப்போம். ஆனால், நாங்கள் விளையாடிய விதத்தைப் பார்க்கும் போது, அரையிறுதிக்குச் செல்வதற்கு எங்களுக்குத் தகுதியில்லை" என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .