2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: அதிர்ஷ்டமில்லை என்கிறார் மொரின்யோ

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தின் பிறீமியர் லீக் போட்டிகளில் இப்பருவகாலத்தில், மன்செஸ்டர் யுனைட்டெட் அணிக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை என்ற கருத்தை, அவ்வணியின் முகாமையாளர் ஜொஸே மொரின்யோ, மீண்டும் வெளிப்படுத்தினார்.

எவேர்ட்டன் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இப்போட்டியில், போட்டியின் பெரும்பாலான நேரத்தில், யுனைட்டெட் அணியே ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் ஸல்டான் இப்ராஹிமோவிக் பெற்ற கோலின் உதவியுடன் 1-0 என முன்னிலை வகித்த யுனைட்டெட் அணி, போட்டியின் 89ஆவது நிமிடத்தில், சர்ச்சைக்குரிய விதத்தில் எவேர்ட்டன் அணிக்கு வழங்கப்பட்ட பெனால்டியின் உதவியுடன், கோல்களை எவேர்ட்டன் சமப்படுத்தியது. எனவே போட்டி சமநிலையில் முடிந்தது. இந்தப் போட்டி முடிவைத் தொடர்ந்து, யுனைட்டெட் அணி 6ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த மொரின்யோ, தனது அணிக்கு வெற்றி கிடைத்திருக்க வேண்டுமெனத் தெரிவித்ததோடு, யுனைட்டெட் அணியின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கு, தன்னால் எதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

89ஆவது நிமிடத்தில் மரௌனே ஃபெலானி, தவறொன்றைச் செய்தார் என வழங்கப்பட்ட பெனால்டி, தவறானது என சில நிபுணர்கள் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பாகக் கேட்கப்பட்ட போது, அது தொடர்பில் அவர் நழுவல் முறையில் பதிலளித்தார். "அதை நான் பார்த்திருக்கவில்லை" என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே தனது கருத்துகள் காரணமாகச் சர்ச்சைகளைச் சந்தித்துள்ள மொரின்யோ, அதே சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவே, இவ்வாறு மழுப்பலாகப் பதிலளித்தார் எனக் கருதப்படுகிறது.

இந்தத் தொடரில், யுனைட்டெட் அணியினர், சிறப்பாக விளையாடுவது போன்று தோன்றினாலும், போதிய முடிவுகளைப் பெறவில்லை என விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றனர். அது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், "நீங்கள் (ஊடகவியலாளர்) தான் அது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும். எனது அணி வீரர்கள், நடைமுறைக்கேற்ற கால்பந்தாட்டத்தை வெளிப்படுத்தி, போட்டிகளையும் பட்டங்களையும் வெல்லும் போது, அது சரியானதன்று, சிறப்பானதன்று எனச் சொல்கிறீர்கள். இப்போது நடப்பது போன்று, எனது அணிகள் மிக மிக மிகச் சிறப்பாக விளையாடினாலும், 'என்ன நடந்தாலும், முடிவுகள் தான் முக்கியம்' என்கிறீர்கள்" என்று தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மற்றொரு போட்டியில் ஏ.எப்.சி போர்ண்மெத் அணியும் லிவர்பூல் அணியும் மோதின. இப்போட்டியில் போர்ண்மெத் அணி, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X