2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: வென்று முதலிடத்தில் செல்சி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (11) இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றிபெற்ற செல்சி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்தை சனிக்கிழமை (10) இழந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் செல்சி பெற்ற வெற்றி, பிறீமியர் லீக்கில் அவ்வணி தொடர்ச்சியாக பெறும் ஒன்பதாவது வெற்றியாகும்.

வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியன் அணிக்கெதிரான போட்டியில், 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றமையைத் தொடர்ந்தே, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது. செல்சி சார்பாக பெறப்பட்ட கோலினை, போட்டியின் 76ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்றார். வெஸ்ட் ப்ரோம் அணியின் தடுப்பாட்டக்காரர் கரித் மக்கோலியிடமிருந்து பந்தைப் பறித்தே, இக்கோலை கொஸ்டா பெற்றிருந்தார்.

கொஸ்டாவின் கோல் தவிர, 30 அடி தூரத்திலிருந்து டேவிட் லூயிஸ் அடித்த "பிறீ கிக்" மட்டுமே கோல் கம்பத்தை நோக்கிய மற்றொரு உதையாக இருந்தது. இது தவிர, என் கலோ கண்டேயின் உதையொன்று பெட்ரோவில் பட்டு, கோல் கம்பத்துக்கு வெளியே உருண்டு சென்றிருந்தது.

பிறீமியர் லீக்கில், தனது முதலாவது கோலை ஹென்றிக் மிகித்திரயான் பெற, 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென் ஹொட்ஸ்பர் அணியை மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்கடித்தது. அன்டர் ஹெரேராவிடமிருந்து பந்தைப் பெற்ற மிகித்திரயான், போட்டியின் 29ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்றிருந்தார்.

பிறீமியர் லீக்கில் கோல் பெற்ற முதலாமவராக மாறிய 27 வயதான மிகித்திரயானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போட்டி முடிவடைய 10 நிமிடங்கள் இருக்கையில், கணுக்கால் காயம் காரணமாக தூக்குப்படுக்கையில் எடுத்துச் செல்லப்பட்டிருந்தார். இக்காயம் காரணமாக, எதிர்வரும் 26ஆம் திகதி வரை மிகித்திரயானால் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, லிவர்பூல், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களை பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

போட்டியின் ஐந்தாவது நிமிடத்திலேயே கோலொன்றைப் பெற்ற அடம் லலானா லிவர்பூலுக்கு முன்னிலையை வழங்கினார். 27ஆவது நிமிடத்தில், 25 அடி தூரத்திலிருந்தான டிமித்திரி பயேட்டின் "பிறீ கிக்" மூலம் கோல் எண்ணிக்கையை சமப்படுத்திய வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், 39ஆவது நிமிடத்தில் அந்தோனியோ பெற்ற கோலின் மூலம் முன்னிலை பெற்றது. இருப்பினும், 48ஆவது நிமிடத்தில் டிவோக் ஒரிஜி பெற்ற கோலின் மூலமாக, போட்டியை லிவர்பூல் சமநிலையில் முடித்துக் கொண்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .