2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கைக்குத் தோல்வி ; தரங்கவுக்குத் தடை

Editorial   / 2017 ஜூன் 04 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், இலங்கை அணி பங்குபற்றிய முதலாவது போட்டியில், தென்னாபிரிக்க அணியிடம் படுதோல்வியடைந்துள்ளது.

இலண்டன், ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இப்போட்டியில், இலங்கையின் வழக்கமான தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், உபாதை காரணமாகப் பங்குபற்றாத நிலையில், உபுல் தரங்கவே, அணித்தலைவராகச் செயற்பட்டிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில், 320, 330 ஓட்டங்களைப் பெறுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சு, இறுதி சில ஓவர்களில் சிறப்பாக அமைந்திருந்தது.

துடுப்பாட்டத்தில் தனது 25ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டிச் சதத்தைப் பூர்த்தி செய்த ஹஷிம் அம்லா, 115 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்றார். தவிர, ஃபப் டு பிளெஸி 75 (70), ஜே.பி. டுமினி ஆட்டமிழக்காமல் 38 (20) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், நுவான் பிரதீப், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பதிலளித்தாடிய இலங்கை அணி, மிகச்சிறந்த ஆரம்ப இணைப்பாட்டமாக, 69 ஓட்டங்களைப் பகிர்ந்தது. அதன் பின்னர், ஒரு கட்டத்தில் 11.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 94 ஓட்டங்களுடன், ஆதிக்க நிலையில் காணப்பட்ட இலங்கை, அதன் பின்னர் விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்தது. இறுதியில், 41.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 203 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 96 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் உபுல் தரங்க 57 (69), குசல் பெரேரா 44 (66), நிரோஷன் டிக்வெல்ல 41 (33) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் இம்ரான் தாஹிர் 8.3 ஓவர்களில் 27 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக் கொடுத்து, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தவிர கிறிஸ் மொறிஸ், 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, இம்ரான் தாஹிர் தெரிவானார்.

இதேவேளை, இந்தப் போட்டியில், இலங்கை அணி, பந்துவீச வேண்டிய நேரத்துக்குள் ஓவர்களை வீசி முடிக்காமல், மிக அதிகமான மேலதிக நேரத்தை எடுத்துக் கொண்டமையின் காரணமாக, அணியின் தலைவர் உபுல் தரங்க, 2 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார். தவிர, அணியின் வீரர்கள் அனைவருக்கும், போட்டி ஊதியத்தின் 60 சதவீதம், அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X