2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இலங்கையை வென்று அரையிறுதியில் பாகிஸ்தான்

Editorial   / 2017 ஜூன் 12 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது. கார்டிப்பில், இன்று இடம்பெற்ற இலங்கை அணிக்கெதிரான தமது இறுதி குழுநிலைப் போட்டியில் வெற்றிபெற்றே, குழு பி-இலிருந்து இரண்டாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதிபெற்றுள்ளது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் சஃப்ராஸ் அஹமட், இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார்.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல, அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸின் இணைப்பாட்டம் காரணமாக சிறந்ததோர் அடித்தளத்தைப் பெற்றபோதும், இவர்களிருவரினதும் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. பின்னர், பின்வரிசையில், அசேல குணரட்ன, சுரங்க லக்மால் பெற்ற ஓட்டங்களின் மூலமே, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில், நிரோஷன் டிக்வெல்ல 73 (86), அஞ்சலோ மத்தியூஸ் 39 (54), குசல் மென்டிஸ் 27 (29), அசேல குணரட்ன 27 (44), சுரங்க லக்மால் 26 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ஜுனைட் கான், ஹஸன் அலி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் மொஹமட் ஆமிர், ஃபாஹிம் அஷ்ரப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு, 237 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், பக்கார் ஸமனின் அதிரடி ஆரம்பத்தைப் பெற்றாலும், பின்னர் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட நெருக்கடி நிலைக்கு வந்தபோதும், பிடியெடுப்புகள் தவறவிடப்பட, சஃப்ராஸ் அஹமட்டின் வழிகாட்டலில், 44.5 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில், சஃப்ராஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 61 (79), பக்கார் ஸமர் 50 (36), அஸார் அலி 34 (50), மொஹமட் ஆமிர் ஆட்டமிழக்காமல் 28 (43) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும், சுரங்க லக்மால், லசித் மலிங்க, திஸர பெரேரா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக, சஃப்ராஸ் அஹமட் தெரிவானார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .