2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஊக்கமருந்துச் சோதனையில் ஷரபோவா தோல்வி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் போது, ஊக்கமருந்துச் சோதனையில் தோல்வியடைந்ததை உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா வெளிப்படுத்தியுள்ளார்.

இருபத்தெட்டு வயதான ஷரபோவா, தடை செய்யப்பட்ட மெல்டோனியத்தை பயன்படுத்தியுள்ளார். எனினும் சுகாதாரப் பிரச்சினைகளுக்காக 2006ஆம் ஆண்டிலிருந்து இதை அவர் உள்ளெடுத்துள்ளார்.

ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஷரபோவா, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் தொழில்முறையாக இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விசாரணைகள் முடிவடையும் வரை ஷரபோவாவுடனான உறவை இடைநிறுத்துவதாக விளையாட்டு அணிகலன் தயாரிப்பு நிறுவனமான நைகி தெரிவித்துள்ளது.

தான் சோதனையில் தோல்வியடைந்ததாகவும் அதற்கான முழுப்பொறுப்பையும் தான் ஏற்பதாக தனது பதினேழாவது வயதில் 2004ஆம் ஆண்டு விம்பிள்டன் பட்டம் வென்ற ஷரபோவா கூறியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் தகவல்களின்படி கடந்த 11 வருடங்களாக, உலகில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீராங்கனை ஷரபோவா ஆவார். டென்னிஸில் மட்டுமே இவர், 26 மில்லியன் ஸ்டேர்லிங் பவுன்ஸ்களை சம்பாதித்துள்ளார்.

அவரது குடும்ப மருத்துவரால் வழங்கப்பட்ட பின், கடந்த 10 வருடங்களாக மெல்டோனியத்தை உள்ளெடுத்ததாக ஷரபோவா தெரிவித்துள்ளபோதும் அதை மில்ட்றறோனேட் எனவே அந்த மருந்தை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தான் சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்திலிருந்து கடிதத்தை பெற்ற பின்னர், சில நாட்களுக்கு முன்னரேயே, அது மெல்டோனியத்தின் இன்னொரு பெயரே என அறிந்து கொண்டதாக ஷரபோவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நீண்ட காலத் தடையை ஷரபோவா தவிர்ப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக அவரின் வழக்குரைஞர் ஜோன் ஹக்கேர்டி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பகிரங்கத் தொடரின் மெல்பேர்ணில் இடம்பெற்ற, உலகின் முதல்தர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸினுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஜனவரி 26ஆம் திகதியே ஊக்க மருந்து சோதனை மாதிரியை ஷரபோவா கையளித்துள்ளார்.

இதனையடுத்து, மாதிரியை ஆராய்ந்த உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை, அதில் மெல்டோனியம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து, ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் வசிக்கும் ஷரபோவா, கடந்த 2ஆம் திகதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

“இதை நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம், கடந்த 10 வருடங்களாக, இந்த மருந்து, உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மையின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இல்லை. அத்தோடு இந்த மருந்தை நான் கடந்த 10 வருடங்களாக சட்டரீதியாக உள்ளேடுக்கிறேன்” என ஷரபோவா தெரிவித்தார்.  

“எனினும், ஜனவரி முதலாம் திகதி, விதிகள் மாற்றமடைந்தது. அத்தோடு மெல்டோனியம் தடை செய்யப்பட்ட மருந்தானது, எனக்கு தெரியவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை டிசம்பர் 22ஆம் திகதி தடைசெய்யப்பட்ட வரிசையில் உள்ள மாற்றங்கள் தொடர்பான மின்னஞ்சலை அனுப்பியதாகவும், ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விவரங்கள் இருந்திருக்ககூடிய முகவரிக்கு செல்லவில்லையென்று ஷரபோவா தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (07) செய்தியாளர் மாநாட்டை அறிவித்தபோது, அவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

மேற்படி மெல்டோனியத்தின் மூலம் தாங்குதிறனை அதிகரிக்கச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பல சோதனை மாதிரிகளில் மெல்டோனியத்தை கண்ட உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை, இதன் மூலம் திறமைகள் அதிகரிக்கப்படும் பதார்த்தங்களை கொண்டிருந்தமை கண்டுபிடித்தது.

எவ்வாறெனினும் எதிர்வரும் மாதம் 29 வயதை அடையவுள்ள ஷரபோவா, அண்மைய எதிர்காலத்தில் டென்னிஸ்ஸுக்கு திரும்ப எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டென்னிஸின் ஊக்கமருந்துக்கெதிரான திட்டம்‌ மற்றும் உலக ஊக்கமருந்துக்கெதிரான முகவராண்மை வழிமுறைகளின்படி நான்கு வருடங்கள் வரையான தடையை ஷரபோவா எதிர்நோக்கவுள்ளார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X