2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊக்க மருந்தை ஏற்கிறது யூ.ஈ.எஃப்.ஏ: ஆர்சின் வெங்கர்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 24 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் (யூ.ஈ.எப்.ஏ), ஊக்க மருந்துப் பாவனையை ஏற்பதாக, ஆர்சனல் அணியின் பயிற்றுநர் ஆர்சின் வெங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செப்டெம்பரில் இடம்பெற்ற சம்பியன்ஸ் லீக் போட்டியில், குரோஷிய கால்பந்தாட்டக் கழகமான டினாமோ ஸக்ரெப் அணியுடன் மோதிய ஆர்சனல் அணி, 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.

அந்தப் போட்டியின் பின், ஸக்ரெப் அணியின் வீரரான அரிஜன் அடெமி, ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை உறுதிப்படுத்தப்பட, அவருக்கு 4 வருடங்கள் தடை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் கருத்துத் தெரிவித்திருந்த வெங்கர், ஊக்க மருந்துப் பாவனையை மேற்கொண்ட அணியொன்றால், நீதியற்ற முறையில் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார். அத்தோடு, சில அணிகள், ஊக்க மருந்து விதிகளை மீறியுள்ளதாகவும், ஒழுங்கான இடைவெளியில் ஊக்க மருந்துச் சோதனைகள் இடம்பெற வேண்டுமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு விளக்கமளிக்குமாறு, கால்பந்தாட்டச் சங்கம் கோரியிருந்த நிலையில், தற்போது, மீண்டும் அதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள வெங்கர், ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் மீது, மேலும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

விதிகளின்படி, போட்டியொன்றில் வீரரொருவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டால், அவருக்கான தடை விதிக்கப்படுமென்ற போதிலும், போட்டியின் முடிவு மாறாது.

'அதுவொரு ஆச்சரியமான சட்டம். ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம், விதிகளைப் பிரயோகிக்கிறது, அது திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த விதியுடன் நான் ஒத்துக் போகவில்லை. 'அந்த வீரர், ஊக்க மருந்துப் பாவனையில் ஈடுபட்டார், ஆனால், போட்டியின் முடிவு மாறாது" எனத் தெரிவிக்க முடியாது. அவ்வாறாயின் நீங்கள், ஊக்க மருந்துப் பாவனையை ஏற்றுக் கொள்வதாகவே அர்த்தம்" எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போதுள்ள விதியாக, மேற்சொன்ன விதியே காணப்படுகிறது என்பதைத் தெரிவித்த வெங்கர், அதை ஏற்றுக் கொள்வதாகவும், தங்களது சொந்தப் பெறுபேறுகள் தொடர்பாகக் கவனஞ்செலுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .