2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எனது சிறந்த டென்னிஸ் இனிமேல் தான்: மரே

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

டென்னிஸ் உலகில் 2000களின் பின்னர் மிக நீண்டகாலமாக ரொஜர் பெடரர் - ரபேல் நடால் எனும் இருவரின் ஆதிக்கம் காணப்பட்டது. பின்னர் பெடரரின் போர்ம் இழப்பு, நடாலின் உபாதைகளைத் தொடர்ந்து, ஜோக்கோவிச்சால் முழுமையாக ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாக, ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் மாறியுள்ளது.

மிக நீண்டகாலமாகவே, டென்னிஸ் உலகத்தை ஆதிக்கம் செலுத்தும் ஒருவராகக் கருதப்பட்டிருக்காத அன்டி மரே, அண்மைக்காலத்தில் முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளார். விம்பிள்டனில் இம்முறை சம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தார். கனடாவின் மிலோஸ் றாவோனிஸை 6-4, 7-6, 7-6 என நேரடி செட்களில் வென்று, தனது ஆதிக்கத்தை மரே வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது 2ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ள மரே, முதலாவது இடத்திலுள்ள ஜோக்கோவிச்சுக்கு, முழுமையான போட்டியாளராக இன்னமும் கருதப்படாத போதிலும், வெற்றியின் பின்னர் மரே தெரிவித்துள்ள கருத்துகள், ஜோக்கோவிச்சுக்கான எச்சரிக்கையாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

"எனது சிறந்த டென்னிஸ், இனிமேல் தான் உள்ளது என நான் இன்னமும் நினைக்கிறேன். இன்னும் அதிகமாக வெல்வதற்கான வாய்ப்பு எனக்கு உள்ளது என நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

தொடர்ச்சியான பெறுபேறுகள் என்ற அடிப்படையில், கடந்த 3 மாதங்களில் தான் வெளிப்படுத்திய திறமைகளே, தனது டென்னிஸ் வாழ்வில் இதுவரை தான் வெளிப்படுத்திய சிறப்பான பெறுபேறுகள் எனக் குறிப்பிட்ட 29 வயதான மரே, "ஒவ்வொருவருடைய நேரமும் வெவ்வேறான பருவங்களில் வரும். சிலருக்கு 20களின் ஆரம்பத்தில், சிலருக்கு 20களின் மத்தியில். எனக்கு இனிமேல் தான் என நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்தார்.

பெடரர், ஜோக்கோவிச், நடால் என மூன்று வீரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் டென்னிஸ் போட்டிகளில், தன்னையும் முன்னிறுத்தும் ஆசையை, மரே வெளியிட்டார்.

"அதிகமான போட்டிகளில் வெற்றிபெற நான் விரும்பினேன். நான் ஏற்கெனவே (முன்பு) சொன்னது போல், டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த வீரர்களாக அமையக்கூடிய 3 வீரர்களுக்கெதிராக நான் விளையாட வேண்டியிருந்தது" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .