2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொன்ககாப் தங்கக் கிண்ணம்: அரையிறுதியில் ஐ.அமெரிக்கா

Editorial   / 2017 ஜூலை 20 , பி.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொன்ககாப் தங்கக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, ஐக்கிய அமெரிக்க அணி தகுதிபெற்றுள்ளது. எல்-சல்வடோர் அணிக்கெதிரான காலிறுதிப் போட்டியில் வென்றே, அவ்வணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

ஐ.அமெரிக்காவில் நடைபெறும் இப்போட்டிகளில், 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், தனது முதலாவது தங்கக் கிண்ணத்தை வெல்ல எதிர்பார்க்கும் ஐ.அமெரிக்கா, ஒப்பீட்டளவில் சிறிய அணியான எல்-சல்வடோரிடமிருந்து, கடுமையான சவாலை எதிர்கொண்டது.

முதற்பாதியில் இரு அணிகளும் சிறப்பாக மோதிக் கொண்ட போது, முதற்பாதியின் அரைப் பகுதியில், ஐ.அமெரிக்காவின் கயாசி ஸர்டெஸ் பெற்ற கோல், “ஓப் சைட்” என மத்தியஸ்தரால் அறிவிக்கப்பட்டது. ஆனால், மீள் ஒளிபரப்புகளில், அது சரியான கோல் என்பது வெளிப்பட்டது. எனவே, ஐ.அமெரிக்க அணிக்கு, துரதிர்ஷ்டமான ஒன்றாக அது அமைந்தது.

ஆனால், போட்டியின் 41ஆவது நிமிடத்தில், ஓமர் கொன்ஸலெஸ், சிறப்பான கோலொன்றைப் பெற்று, ஐ.அமெரிக்காவுக்கு முன்னிலையை வழங்கினார்.

முதலாவது பாதி முடிவடையும் நேரத்தில், எரிக் லிச்சாஜ், தனது அணிக்காக இன்னொரு கோலைப் பெற்று, 2-0 என்ற முன்னிலையை வழங்கினார். லிச்சாஜின் இந்தக் கோல், சர்வதேசப் போட்டிகளில் அவர் பெற்ற முதலாவது கோலாகும்.

தொடர்ந்து இரு அணிகளும் மோதிய போதிலும், மேலதிக கோல் எதுவும் பெறப்படவில்லை. ஆனால், எல் சல்வடோர் அணியின் பல அடிகள், ஐ.அமெரிக்க கோல் காப்பாளர் டிம் ஹோவார்டால், அற்புதமாகத் தடுக்கப்பட்டமையே, ஐ.அமெரிக்காவுக்கான பலமாக அமைந்தது.

அரையிறுதிக்குத் தகுதிபெற்றுள்ள ஐ.அமெரிக்கா, 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற கொஸ்டா றிக்காவை, நாளை (22) சந்திக்கவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .