2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கழக உலகக் கிண்ணம்: சம்பியனானது றியல் மட்ரிட்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தினால் நடத்தப்படும் கழக உலகக் கிண்ணத்தை ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான றியல் மட்ரிட் கைப்பற்றியுள்ளது. உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கானவிருதை அண்மையில் வென்ற போர்த்துக்கல்லின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்ற ஹட்-ட்ரிக் கோல்களின் உதவியுடனேயே கழக உலகக் கிண்ணத்தை றியல் மட்ரிட் கைப்பற்றியது.

ஜப்பானியக் கழகமான கஷிமா அன்டோரசை, 4-2 என்ற கோல் கணக்கில் மேலதிக நேரத்தில் தோற்கடித்தே, கழக உலகக் கிண்ணத்தை றியல் மட்ரிட் கைப்பற்றியுள்ளது. போட்டியின் வழமையான நேர முடிவில் இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்றிருந்தநிலையிலேயே, மேலதிக நேரத்துக்கு போட்டி சென்றிருந்தது.

றியல் மட்ரிட் போன்ற ஜாம்பவான் அணிக்கு, கத்துக்குட்டி அணியான கஷிமா சவாலை வழங்காது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இக்கருத்துக்கு மேலும் உறுதி சேர்ப்பதாய், டனி கர்வஜாலிடமிருந்து பந்தைப் பெற்ற  லூகா மோட்ரிக், கோல் கம்பத்தினை நோக்கி உதைய, கஷிமா அணியின் கோல் காப்பாளரினால் தடுக்கப்பட்ட பந்து நேரே கரிம் பென்ஸீமாவிடம் செல்ல, போட்டியின் ஒன்பதாவது நிமிடத்தில் அவர் அதைக் கோலாக்கினார். இதன் மூலம் றியல் மட்ரிட் முன்னிலை பெற்றது.

எனினும்,  முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடம் முடிவடைய இருக்கையில், றபேல் வரானே பந்தை தவறவிட, அதைக் கைப்பற்றிய கஷிமா அணியின் தலைவர் ககு ஷிபஷாகி கோலொன்றைப் பெற்று கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார்.
பின்னர் இரண்டாவது பாதியின் ஆரம்பத்தில், றியல் மட்ரிட் அணியின் தலைவர் சேர்ஜியோ றாமோஸ் விட்ட தவறினையடுத்து பந்தைக் கைப்பற்றிய ஷிபஷாகி, 52ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் பெற்று தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். இந்நிலையில், கஷிமா அணி அதிசயத்தை நிகழ்த்தும் என்றவாறான நிலை காணப்பட்டது.

இருப்பினும், போட்டியின் 58ஆவது நிமிடத்தில் லூகாஸ் வஸ்கூஸ் வீழ்த்தப்பட, வழங்கப்பட்ட பெனால்டியை கிறிஸ் டியானோ ரொனால்டோ கோலாக்கி கோல் எண்ணிக்கையை சமப்படுத்தினார். அதன்பின்னர், போட்டியின் வழமையான நேரத்தில் இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் போட்டி மேலதிக நேரத்துக்குச் சென்றது.

மேலதிக நேரத்தின் ஏழாவது நிமிடத்தில் பென்ஸீமாவிடமிருந்து பந்தைப் பெற்ற ரொனால்டோ தனது இரண்டாவது கோலைப் பெற்று மட்ரிட்டுக்கு முன்னிலை வழங்கியதுடன், 104ஆவது நிமிடத்தில் மீண்டுமொரு கோலைப் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .