2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிரிக்கெட் சபையின் நடவடிக்கையாலேயே மலிங்க பதவி விலகினார்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 09 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கிரிக்கெட் சபையின் நடவடிக்கை காரணமாக, இலங்கையின் இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து லசித் மலிங்க விலகினார் என முன்னாள் பிரதம தேர்வாளர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் பதவி விலக்கப்பட்ட தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த கபில விஜேகுணவர்தன, பதவி விலக்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.

'பொருத்தமான எந்தவிதக் காரணங்களையும் வெளிப்படுத்தாது, நாங்கள் பதவி விலக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பில் நாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம்" என அவர் தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு 11 மணியளவில், விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் எனத் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர், தொலைபேசி மூலமே தங்களது பதவி விலக்கல் குறித்து வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சரால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்த போதிலும், எந்தவிதக் காரணங்களையும் அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். அத்தோடு, பதவி விலக்கல் குறித்து இதுவரை, விளையாட்டுத்துறை அமைச்சிடமிருந்து எந்தவோர் உத்தியோகபூர்வமான தகவலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பிரச்சினைகள் ஆரம்பம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஆசியக் கிண்ணத்துக்கும் உலக இருபதுக்கு-20 தொடருக்குமான குழாம் அறிவிக்கப்பட்ட போது, உயர்மட்டத்திலிருந்தவர்கள் விரும்பிய சில வீரர்கள் இடம்பெறாமை காரணமாக, தங்கள் மீது அழுத்தம் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், விளையாட்டுத்துறை அமைச்சரிடமிருந்து நேரடியான தலையீடு காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், 2 - 3 வீரர்கள் பற்றிக் கேட்டதாகவும், பின்னர் மலிங்க காயமடைந்ததன் பின்னர், மலிங்கவை நாட்டுக்கு மீள அழைத்துவருமாறும் அமைச்சர் கோரியதாகவும் தெரிவித்தார். எனினும், மலிங்க தொடர்ந்தும் பங்களாதேஷில் இருக்க வேண்டுமென்பதை விளங்க வைத்ததாகவும் தெரிவித்தார்.

லசித் மலிங்க திடீரெனப் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான காரணம் குறித்து மலிங்கவிடம் வினவியதாதகவும் தெரிவித்தார். அதன்போது, ஆசியக் கிண்ணப் போட்டிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, அரவிந்த டி சில்வா ஆகியோர், தானும் இருந்த போது, சிரேஷ்ட வீரரொருவருடன் உலக இருபதுக்கு-20 தொடருக்கான குழாம் குறித்துக் கலந்துரையாடியதாகவும், அக்கலந்துரையாடலுக்கு, தலைவரான லசித் மலிங்க அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும், அதன் காரணமாக வருத்தமடைந்ததைத் தொடர்ந்தே, பதவி விலகும் தீர்மானத்தை லசித் மலிங்க எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X