2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கோலியின் கீழ் 5ஆவது தொடர்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டியை வெற்றிகொண்ட இந்திய அணி, ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே, அத்தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தொடர், விராத் கோலியின் தலைமையில், அவ்வணி கைப்பற்றியுள்ள 5ஆவது தொடர்ச்சியான தொடராகும்.

2014ஆம் ஆண்டு டிசெம்பரில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் வைத்து இடம்பெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கெனவே இழந்த நிலையில், 4ஆவது போட்டியின் மூலம், புதிய தலைவராக கோலி பதவியேற்றார். அதற்கடுத்து, பங்களாதேஷுக்கு எதிராக இடம்பெற்ற ஒற்றை டெஸ்ட் போட்டி, வெற்றி - தோல்வியின்றி நிறைவடைந்தது. ஆனால் அதன் பின்னர் இலங்கை, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கெதிரான தொடர்களை வென்ற இந்திய அணி, தற்போது இங்கிலாந்தையும் வென்றுள்ளது.

இந்தத் தொடர் வெற்றி மூலம், 2000/01 காலப் பகுதியில், போர்டர் - கவாஸ்கர் தொடரை வென்ற பின்னர், இந்திய அணி, இந்தியாவில் வைத்து விளையாடிய 27 டெஸ்ட் தொடர்களில், இரண்டே இரண்டு தொடர்களில் மாத்திரம், இந்திய அணி தோல்வியடைந்துள்ளமை, இந்திய மண்ணில் அவ்வணியின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஆனால் மறுபக்கமாக, 2008ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரொன்றை இறுதியாக வென்ற இந்திய அணி, அதற்குப் பின்னர், உள்நாட்டில் தோற்ற ஒரு தொடர் உள்ளடங்கலாக 3 தொடர்களில் தோல்வியடைந்திருந்தது. எனவே, 8 ஆண்டுகளின் பின்னரே, இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் வெற்றியொன்று, இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

இந்தத் தொடர் வெற்றி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இந்திய அணித் தலைவர் கோலி, "கடந்த 14 - 15 மாதங்களில் நாங்கள் வென்ற தொடர்களில், இந்தத் தொடர் தான், அனேகமாக மிகவும் இனிப்பான ஒன்றாகும். எங்களை மிகவும் இலகுவாக வென்ற உயர் தரமிக்க அணியொன்றை, வன்கெடே மைதானத்தில் வைத்து 3-0 என்ற கணக்கில் வெல்வதை விடச் சிறந்தது எதுவுமிருக்காது. இது, மிகவும் சிறப்பாக உணர வைக்கிறது" என்றார்.

தோல்வி தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணித் தலைவர் அலஸ்டெயர் குக், இப்போட்டியில் களத்தடுப்பில் தாங்கள் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்துக் கவனம் செலுத்தினார். அத்தோடு, மேலதிக சுழற்பந்து வீச்சாளரை விளையாடாமல், 4 வேகப்பந்து வீச்சாளர்களுடனும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடனும் இப்போட்டியில் களமிறங்கியமையையும், அவர் தோல்விக்கான காரணங்களுள் ஒன்றாகச் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .