2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெஸ்ட் தலைவர் பதவியிலிருந்து விலகினார் ஏபி டி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 13 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவர் பதவியிலிருந்து, அவ்வணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ் விலகியுள்ளார். அத்தோடு, இலங்கைக்கெதிராக ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்ற மாட்டார் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஜூலையிலிருந்து, உபாதை காரணமாக கிரிக்கெட் போட்டிகளில், டி வில்லியர்ஸ் பங்கேற்றிருக்கவில்லை. அந்த நேரத்தில், அணியின் தலைவராக ஃபப் டு பிளெஸி செயற்பட்டார். அதில், அவுஸ்திரேலியாவுக்கெதிராக அவுஸ்திரேலியாவில் வைத்து இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, தனது தலைமைத்துவத்தை, பிளெஸி நிரூபித்தார்.

இதையடுத்து, அடுத்த தலைவராக பிளெஸி நீடிக்க வேண்டுமென ஒரு பிரிவினரும், டி வில்லியர்ஸ் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டுமென மற்றைய பிரிவினரும் கோரி வந்தனர். இந்தக் கலந்துரையாடல்களுக்கெல்லாம் முடிவு வழங்குவதைப் போல, தனது டெஸ்ட் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக, ஏபி டி வில்லியர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.

"அணியின் நலன்கள், தனிப்பட்டவர்களின் - என்னுடையது உட்பட - நலன்களை விடப் பெறுமதியானவை. டெஸ்ட் அணிக்குத் தலைமை தாங்குமாறு கேட்கப்பட்டமை, அற்புதமான கௌரவமாக இருந்தது. ஆனால், இரண்டு தொடர்களை நான் தவறவிட்டதோடு, அடுத்துவரும் இலங்கைக்கெதிரான தொடரிலும் பங்கேற்பது, சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. அவுஸ்திரேலியாவின் எமது குழாமின் அதிசிறந்த பெறுபேறுகளைத் தொடர்ந்து, அணியின் நலன்களைக் கருத்திற்கொண்டு, அணியின் நிரந்த டெஸ்ட் தலைவராக, ஃபப் டு பிளெஸி உறுதிப்படுத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்ட தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை, புதிய தலைவராக, பிளெஸியை உறுதிப்படுத்தியுள்ளது. அத்தோடு, இலங்கைக்கெதிராக 26ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள தொடரில், டி வில்லியர்ஸ் பங்கேற்ற மாட்டார் எனவும் அச்சபை உறுதிப்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .