2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தடிப்பான துடுப்புகளுக்கு வருகிறது ஆப்பு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் துடுப்புகளின் அளவை மட்டுப்படுத்துவதற்கான விதிகளை, கிரிக்கெட்டின் விதிகளில் ஏற்படுத்த வேண்டுமென, கிரிக்கெட் விதிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பான மெரில்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) உலக கிரிக்கெட் செயற்குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட்டில் துடுப்பாட்டம், பந்துவீச்சை அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தெரிவித்துள்ள அக்குழு, துடுப்புகளின் தடிப்பம் குறித்தும் அவற்றின் எடை குறித்தும் கவனம் செலுத்தியுள்ளது.

அதிகாரங்கள் இல்லாவிட்டாலும், எம்.சி.சி-இன் விதிகள் தொடர்பான இறுதி முடிவில் அதிகளவில் மதிக்கப்படும் சுயாதீனமான இந்தக் குழுவில், சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்ஸனும் உள்ளடங்கியுள்ளார்.

ஒழுங்காக அடிக்கப்படாத அடிகள் கூட, ஆறு ஓட்டங்களுக்குப் பறப்பதை உதாரணமாகக் காட்டிய அச்செயற்குழு, 1905ஆம் ஆண்டளவில் துடுப்புகளின் தடிப்பம் 16 மில்லிமீற்றராகக் காணப்பட்டதாகவும் 1980களில் 18 மில்லிமீற்றராகக் காணப்பட்டதாகவும், தற்போதுள்ள உயர்ரக துடுப்புகள், சராசரியாக 35-40 மில்லிமீற்றர் தடிப்பமாகக் காணப்படுவதாகவும், சிலவேளைகளில் 60 மில்லிமீற்றர்வரை செல்வதாகவும் தெரிவித்துள்ளது.

இதைத் தவிர, 2014ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இருபதுக்கு-20 போட்டிகளை சேர்க்க வேண்டுமெனவும், டெஸ்ட் போட்டிகளில் இரு பிரிவுகள் உருவாக்கப்பட்டு, ஒரு குழுவிலிருந்து இன்னொரு குழுவுக்குத் தரமிறக்கப்படும் வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டுமெனவும், டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிரு இடங்களிலும் காணப்படும் அணிகளுக்கிடையில் இறுதிப் போட்டி போன்றதொரு போட்டி இடம்பெற வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ள அச்செயற்குழு, 'மன்காட் விதி" என அழைக்கப்படும் விதியில் மாற்றங்களை ஏற்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, பந்துவீச்சாளரொருவர் பந்தை வீசும் வரை, தனது பக்கத்திலுள்ள துடுப்பாட்ட வீரர், கிறீஸ் கோட்டை விட்டு விலகினால், அவரை ஆட்மிழக்கச் செய்ய வழிசெய்யப்படப் பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .