2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தீர்ப்புகள் தொடர்பாக மஹேல விமர்சனம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அணியின் துடுப்பாட்டமும் களத்தடுப்பும் மோசமாக அமைந்த, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான போட்டியில், நடுவர்களின் தீர்ப்புகளும் இலங்கைக்குச் சார்பாக அமைந்திருக்கவில்லை. இது, மஹேல ஜெயவர்தனவின் விமர்சனங்களைச் சந்தித்தது.

இலங்கையின் சிரேஷ்ட வீரரான திலகரட்ண டில்ஷான், 4ஆவது ஓவரின் முதற்பந்தில், கார்லொஸ் பிறெத்வெய்ட்டின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் தவறாக ஆட்டமிழப்பு வழங்கப்பட்டார். அப்பந்து, விக்கெட்டைத் தாக்காது என்பது, ஓரளவு தெளிவாக இருந்த போதிலும், தவறாகக் கணித்த நடுவர், அதற்கு ஆட்டமிழப்பு வழங்கினார்.

பின்னர், இலங்கை அணி பந்துவீசும் போது, 11ஆவது ஓவரின் முதலாவது பந்தில், சிரிவர்தன வீசிய பந்தில் டினேஷ் ராம்டின், எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்திருக்க வேண்டுமென்ற போதிலும் ஆட்டமிழப்பு வழங்கவில்லை.

பின்னர் 16ஆவது ஓவரின் முதற்பந்தில், துஷ்மந்த சமீரவின் பந்துவீச்சில் டினேஷ் சந்திமால் பிடியொன்றைப் பிடித்த போதிலும், மூன்றாவது நடுவரால், சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. இவை யாவும், மஹேலவைக் கோபப்படுத்தின.

டில்ஷானின் ஆட்டமிழப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மஹேல, 'நடுவர்களே, இது உலகக் கிண்ணம். இதை விடச் சிறப்பானதாக நீங்கள் இருக்க வேண்டும். 5ஆவது விக்கெட் கம்பொன்று இருந்திருந்தால், அப்பந்து, அந்தக் கம்பையே தாக்கியிருக்கும்" என டுவீட் செய்தார்.

தொடர்ந்து அவர், 'இருபதுக்கு-20 போட்டிகளிலும் தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டத்தைப் பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டது", 'கால்பந்தாட்டப் போட்டியின் மத்தியஸ்தர் கூட மோசமாக உள்ளார். மோசமான நாளொன்றை நான் சந்தித்திருக்கிறேன். இலங்கைக்கும் மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கும் துரதிர்ஷ்டம்" எனத் தெரிவித்தார்.

டினேஷ் சந்திமாலின் பிடி குறித்துக் கருத்துத் தெரிவித்த இயன் சப்பல், கிடைத்த காணொளிகளின் அடிப்படையில், அப்பந்தை சந்திமால் பிடித்துள்ளார் எனவே தெரிகிறது எனவும் நடுவரின் தீர்ப்புத் தவறானது எனவும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .