2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

திரிமான்ன மீது மஹேல காட்டம்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 21 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான உலக இருபதுக்கு-20 போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்த நிலையில், இலங்கையின் இளைய வீரர்கள் மீது, விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில், அணியின் முன்னாள் உப தலைவரான லஹிரு திரிமான்ன மீது, விசேடமான விமர்சனத்தை, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன முன்வைத்தார்.

இரு அணிகளுக்குமிடையில் நேற்றிரவு இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ஓட்டங்களை மாத்திரமே பெற, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில், காயம் காரணமாகத் துடுப்பெடுத்தாடாது போன போதிலும், அவ்வணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்திருந்தது.

போட்டிக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த மஹேல ஜெயவர்தன, இலங்கையின் லஹிரு திரிமான்ன, டினேஷ் சந்திமால் போன்ற வீரர்கள் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.

'உண்மையில், எந்தவித சாக்குப்போக்குகளும் இல்லை. ஏனெனில், திரிமான்ன, கிட்டத்தட்ட 4, 5 ஆண்டுகளாக, அனைத்து வகையான போட்டிகளிலும் பங்குபற்றிய ஒருவர். அதன் காரணமாகத்தான், புதிய தேர்வாளர்கள் அவரை, அணிக்குள் கொண்டுவந்தனர். மத்தியவரிசை, சிறிது தடுமாற்றமானதாக இருந்தது. அதனால், லஹிரு திரிமான்னவை மூன்றாமிடத்தில் துடுப்பெடுத்தாட வைப்பதன் மூலம், 10 தொடக்கம் 12 ஓவர்கள், அவரைத் துடுப்பெடுத்தாட வைக்கும் பணியையே வழங்கினர்.

அதன் காரணமாக, அஞ்சலோ மத்தியூஸ், கப்புகெதர, சிரிவர்தன போன்ற வீரர்கள், களமிறங்கிய, அடித்தாட முடியும். ஆனால், அவர் (திரிமான்ன) ஆட்டமிழந்த விதம் குறித்து நான், மிகவும் ஏமாற்றமடைந்தேன்" எனத் தெரிவித்தார். அத்தோடு, அனுபவமிக்க வீரரான கப்புகெதர ஆட்டமிழந்த விதம் குறித்தும், மஹேல விமர்சனங்களை வெளியிட்டார்.

ஆசியக் கிண்ணத்துக்கும் உலக இருபதுக்கு-20 தொடருக்குமாக முன்னர் அறிவிக்கப்பட்ட இலங்கை குழாமில் லஹிரு திரிமான்ன சேர்க்கப்பட்டிருக்காத நிலையில், உலக இருபதுக்கு-20 தொடருக்குப் புறப்படும் அன்று அறிவிக்கப்பட்ட புதிய குழாமில், திரிமான்ன சேர்க்கப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் இடம்பெற்ற பயிற்சிப் போட்டிகளில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கெதிராக முறையே 41, 45 ஓட்டங்களைப் பெற்று நம்பிக்கையளித்த திரிமான்ன, உலக இருபதுக்கு-20 தொடரின் போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கெதிராக 6 ஓட்டங்களையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 5 ஓட்டங்களையும் மாத்திரமே பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் தற்போதைய நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவரான இயன் சப்பல், தற்போதுள்ள இளைய வீரர்களில் அனேகர், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோரோடு இணைந்து விளையாடியிருந்த நிலையில், அவர்களிடமிருந்து பாடங்களைக் கற்பதற்குத் தவறவிட்டதாகச் சுட்டிக்காட்டியதோடு, அவர்களை விட்டுவிட்டு, புதிய வீரர்கள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணி கவனஞ்செலுத்த வேண்டுமெனத் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .