2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நாளை ஆரம்பிக்கிறது முதல் டெஸ்ட்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 14 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இலங்கை நேரப்படி நாளை காலை 8.30மணிக்கு பிறிஸ்பேர்ணில் ஆரம்பிக்கிறது.

இவ்வாண்டின் குறிப்பிட்ட காலப்பகுதியில் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலிருந்த பாகிஸ்தான் அணி, நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் வெள்ளையடிக்கப்பட்டதுடன், அதற்கு முன்னர், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுடனான தொடரிலும் இறுதிப் போட்டியிலும் தோல்வியுற்று, வரிசையாக மூன்று போட்டிகளில் தோற்றுள்ளது. இதன் காரணமாக அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.

இருந்தபோதும், பகலிரவு டெஸ்ட் போட்டியாக, மென்சிவப்புப் பந்தில் இடம்பெறவுள்ள போட்டியில், வழமையான பிறிஸ்பேர்ண் ஆடுகள பந்து மேல் எழுந்து தன்மையுடன், ஒளிக்கோபுர வெளிச்சத்தில் பந்து ஸ்விங் ஆவது, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்களுடன், பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்துவீச்சுக் குழுவான மொஹமட் ஆமிர், வஹாப் றியாஸ், ரஹாட் அலி ஆகியோருக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டமே நிலையற்றதாகவிருக்கின்ற நிலையில், ஒரு போட்டித் தடையின் பின்னர் அணிக்குத் திரும்பும் அணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக்கினால் சிறிது உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, அண்மைய காலங்களில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறி வரும் அசாட் ஷஃபிக்கிடமிருந்தும் பாகிஸ்தான் அணி ஓட்டங்களை எதிர்பார்க்கிறது. இதேவேளை, உபாதைக்குள்ளாகிய சுழற்பந்து வீச்சாளர் யாசீர் ஷா இப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபக்கம், இலங்கையில் வைத்து வெள்ளையடிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் தென்னாபிரிக்காவிடம் தொடரை இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து, பாரிய அழுத்தத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலிய அணியில் தேர்வாளர்கள் முதல் வீரர்கள் வரையில் மாறியிருந்தனர். இதனையடுத்து, தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தமது இழந்த கௌரவத்தை தூக்கி நிலைநிறுத்தியிருந்தது.

இந்நிலையில், பாகிஸ்தானுடனான தொடரை வென்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்த அவுஸ்திரேலிய அணி நிச்சயம் விரும்பும். தென்னாபிரிக்க அணியுடான இறுதிப் போட்டியில் விளையாடிய அதேயணியே இப்போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுகப் போட்டியில் சோபிக்காத நிக் மடின்ஸன் ஓட்டங்களைப் பெற்று தனது இடத்தை உறுதிப்படுத்த போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: மற் றென்ஷோ, டேவிட் வோணர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் (அணித்தலைவர்), பீற்றர் ஹன்ட்ஸ்ஹொம்ப், நிக் மடின்ஸன், மத்தியூ வேட் (விக்கெட் காப்பாளர்), மிற்சல் ஸ்டார்க், ஜொஷ் ஹேசில்வூட், நேதன் லையன், ஜக்ஸன் பேர்ட்

எதிர்பார்க்கப்படும் பாகிஸ்தான் அணி: சமி அஸ்லாம், அஸார் அலி, பாபர் அஸாம், யுனிஸ் கான், மிஸ்பா-உல்-ஹக் (அணித்தலைவர்), அசாட் ஷஃபிக், சஃப்ராஸ் அஹமட் (விக்கெட் காப்பாளர்), வஹாப் றியாஸ், யாசீர் ஷா, மொஹமட் ஆமிர், ரஹாட் அலி

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .