2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நாளை முதலாவது பகலிரவுப் போட்டி

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 26 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என வர்ணிக்கப்படும், உலகின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டி, அவுஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.

அடிலெய்ட் ஆடுகளத்தில் இடம்பெறவுள்ள இப்போட்டி, நாளை காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி) ஆரம்பிக்கவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகள், அண்மைக்காலத் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த நிலையில், அப்போட்டிகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பரிட்சார்த்த முயற்சியாக, பகலிரவுப் போட்டிகள் கருதப்படுகின்றன.

இந்த முயற்சி வெற்றிபெறுமாயின், எதிர்கால டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளைப் போல், அதிகளவிலான பகலிரவுப் போட்டிகளைக் கொண்டிருக்கும் வாய்ப்புக் காணப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் சிவப்புப் பந்துக்குப் பதிலாக, மென்சிவப்பு நிறப் பந்து பயன்படுத்தப்படவுள்ளதோடு, இந்தப் போட்டிகளை நடாத்துவதில் மிகப்பெரிய சவாலாக, அந்தப் பந்தே காணப்பட்டது. தற்போதும் கூட, அது தொடர்பான கேள்விகள் காணப்படும் நிலையில், நாளை ஆரம்பிக்கும் போட்டியில், அதிக கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக, அப்பந்தும் காணப்படும்.

மென்சிவப்புப் பந்தினைப் பாதுகாக்கும் பொருட்டு, வழக்கமான அடிலெய்ட் ஆடுகளத்தை விட, அதிக புற்களைக் கொண்ட ஆடுகளமாக, இது அமைக்கப்பட்டுள்ளதால், வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான ஆடுகளமாக இது அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில், 2 போட்டிகளின் நிறைவில் 1-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் நிலையில், இந்தத் தொடரை வெற்றிகொள்வதற்காக அவுஸ்திரேலியாவும், இதைச் சமப்படுத்தும் நோக்கில் நியூசிலாந்தும் களமிறங்கவுள்ளன.

இரண்டாவது போட்டியுடன், அவுஸ்திரேலியாவின் மிற்சல் ஜோன்சன் ஓய்வுபெற்ற நிலையில், அவருக்குப் பதிலாக பீற்றர் சிடில் களமிறங்கவுள்ளார். காயமடைந்த உஸ்மான் கவாஜாவுக்குப் பதிலாக, ஷோன் மார்ஷ் விளையாடவுள்ள அதேவேளை, ஜொஷ் ஹேஸல்வூடுக்குப் பதிலாக, ஜேம்ஸ் பற்றின்சன் களமிறங்கும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

நியூசிலாந்து அணியில், சுழற்பந்து வீச்சாளர் மார்க் கிறெய்க்-க்குப் பதிலாக மிற்சல் சான்டரும், வேகப்பந்து வீச்சாளர் மற் ஹென்றிக்குப் பதிலாக நீல் வக்னரும் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் அணிகள்:

அவுஸ்திரேலியா: ஜோ பேர்ண்ஸ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், அடம் வோகஸ், ஷோன் மார்ஷ், மிற்சல் ஸ்டார்க், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், நேதன் லையன்

நியூசிலாந்து: மார்ட்டின் கப்டில், டொம் லேதம், கேன் வில்லியம்ஸன், றொஸ் டெய்லர், பிரென்டன் மக்கலம், பி.ஜே வற்லிங், மார்க் கிறெய்க், டக் பிரேஸ்வெல், நீல் வக்னர், டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட்ற்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .