2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பதவியிழக்கிறார் மலிங்க?

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 06 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பதவியை, அதன் தற்போதைய தலைவர் லசித் மலிங்க இழக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்குப் பதிலாக, தற்போதைய டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவரான அஞ்சலோ மத்தியூஸ், புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டு செப்டெம்பர் 7ஆம் திகதியிலிருந்து இவ்வாண்டு ஜனவரி 10ஆம் திகதி வரை, 16 மாதங்களுக்கும் மேலாக, உலக இருபதுக்கு-20 தரப்படுத்தலில் முதலிடத்தை வகித்த இலங்கை அணி, பெப்ரவரி 9ஆம் திகதி, மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இந்தியாவுக்கெதிரான தொடரில் தோல்வி, ஆசியக் கிண்ணப் போட்டிகளில் மோசமான பெறுபேறுகள் போன்ற காரணத்தால், தற்போது 7ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

உபாதைகள் காரணமாக அண்மைக்காலமாக அவதிப்பட்டுவரும் லசித் மலிங்க, ஆசியக் கிண்ணப் போட்டிகளின் முதலாவது போட்டியில் பங்குபற்றிய போதிலும், அடுத்த 3 போட்டிகளிலும் அவர் பங்குபற்றியிருக்கவில்லை.
இந்நிலையிலேயே, இலங்கை அணியின் அண்மைக்கால தோல்விகளைக் கருத்திற்கொண்டும், தளர்ந்துபோயுள்ள அணியை ஒற்றுமைப்படுத்தும் நோக்கிலும், அஞ்சலோ மத்தியூஸையே புதிய தலைவராக நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறியவருகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, எந்நேரத்திலும் வெளிவரலாம் எனக் கருதப்படுகிறது.

முழங்காலில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைக்குப் பின்னர், சுமார் 4 மாதங்களின் பின்னர், ஆசியக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றிய லசித் மலிங்க, முதலாவது போட்டியின் பின்னரே காயமடைந்ததைத் தொடர்ந்து, அவரைப் போட்டிகளில் விளையாட அனுமதித்த, இலங்கை அணியின் உடற்கூற்று நிபுணர் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .