2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பார்சிலோனா முகாமையாளராக எர்னேஸ்டோ வல்வெர்டே

Editorial   / 2017 மே 31 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனா, தமது தலைமைப் பயிற்றுநராக, எர்னேஸ்டோ வல்வெர்டேயை, இரண்டு ஆண்டு கால ஒப்பந்தத்தில் நியமித்துள்ளது. வல்வெர்டேயின் ஒப்பந்தத்தை, மூன்றாவது ஆண்டுக்கு நீடித்துக் கொள்ளும் தெரிவு,  பார்சிலோனாவுக்கு காணப்படுகிறது.

பிறிதொரு ஸ்பானியக் கழகமான அத்லெட்டிக் பில்பாபோவின் முகாமையாளராக நான்கு ஆண்டுகள் இருந்த பின்னர், அத்லெட்டிக் பில்பாபோவை விட்டு வெளியேறுவதாக, பார்சிலோனாவின் முன்னாள் முன்கள வீரரான வல்வெர்டே, கடந்த வாரம் அறிவித்திருந்தார்.  

தனது மூன்று ஆண்டு கால ஒப்பந்தத்தின் முடிவில், பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதாக, இவ்வாண்டு மார்ச் மாதம் வெளிப்படுத்திய லூயிஸ் என்றிக்கேயையே, வல்வெர்டே பிரதீயீடு செய்கிறார்.  

53 வயதான வல்வெர்டேயின் ஆற்றல், மதிப்பீடு, அறிவு, அனுபவத்தைப் புகழ்ந்த, பார்சிலோனா கழகத்தின் தலைவர் ஜோஸெப் மரியா பட்டெமு, இளம் வீரர்களை வல்வெர்டே சிரேஷ்ட அணிக்குள் உள்வாங்குவதாகவும், பார்சிலோனாவின் வழியில் விளையாடுவதாகவும் கூறியுள்ளார்.  

பார்சிலோனாவின் புதிய பயிற்சியாளராக வல்வெர்டேயை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, நாளை (01) இடம்பெறவுள்ளது.  

இப்பருவகாலத்தில், கோப்பா டெல் ரேயை மட்டுமே வென்ற பார்சிலோனா, சம்பியன்ஸ் லீக்கில் காலிறுதியுடன் வெளியேறியதோடு, லா லிகாவில் இரண்டாவது இடத்தையே பெற்றது.  

இந்நிலையில், அண்மைய காலங்களில், லியனல் மெஸ்ஸியில் மட்டுமே தங்கியிருக்கும் பார்சிலோனாவை, கூட்டாக இணைந்து செயற்பட வைப்பதுடன், சம்பியன்ஸ் லீக் போட்டிகளில், எதிரணியின் மைதானங்களில், அவ்வணிகள் அதிக கோல்களைப் பெற அனுமதித்த பின்களத்தைப் பலப்படுத்த வேண்டிய தேவை, வல்வெர்டேக்குக் காணப்படுகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .