2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தானை அடித்து துவைத்தது இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 26 , மு.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

லோர்ட்ஸில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்ற இங்கிலாந்து, ஓல்ட் ட்ரஃபோர்ட்டில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கெதிராக பிரமாண்ட வெற்றியைப் பெற்று, பழிதீர்த்துக் கொண்டது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அணியின் உப தலைவர் ஜோ ரூட்டின் 254, அணித் தலைவர் அலிஸ்டியர் குக்கின் 105 ஓட்டங்களின் துணையோடு, எட்டு விக்கெட்டுகளை இழந்து 589 ஓட்டங்களைப் பெற்றபோது, தமது முதலாவது இனிங்ஸை இடைநிறுத்தியது.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. துடுப்பாட்டத்தில் , அவ்வணியின் தலைவர் மிஸ்பா-உல்-ஹக் மாத்திரம் 52 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு ஃபொலோ ஒன்னை வழங்காது, மீண்டும் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஒரு விக்கெட்டினை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது இரண்டாவது இனிங்ஸை இடைநிறுத்தியது. அலிஸ்டியர் குக், ஜோ ரூட் ஆகியோர் ஆட்டமிழக்காமல், முறையே 76, 71 ஓட்டங்களைப் பெற்றனர்.

தொடர்ந்து, 565 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 234 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 330 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. பந்துவீச்சில், கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் அன்டர்சன், மொயின் அலி, ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக ஜோ ரூட் தெரிவானார்.

இப்போட்டியின் நான்காவது நாளில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, கெண்டைக்கால் பின் தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக மைதானத்திலிருந்து வெளியேறிய பென் ஸ்டோக்ஸ், ஆறு வாரங்களுக்கு போட்டிகளில் பங்குபற்றமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .