2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பின்னிலையிலிருந்து வந்து சிற்றியை வென்றது செல்சி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்று (03) இடம்பெற்ற போட்டியொன்றில், பின்னிலையிலிருந்து வந்து மன்செஸ்டர் சிற்றியை செல்சி தோற்கடித்துள்ளது.

செல்சி, 3-1 என்ற கோல் கணக்கில் சிற்றியைத் தோற்கடித்து, தொடர்ச்சியாக எட்டாவது பிறீமியர் லீக் வெற்றியைப் பெற்றுக்கொண்ட செல்சி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் தனது முதலாமிடத்தை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

போட்டியின் முதற்பாதியின் முடிவில் கரி காகிலினால் பெறப்பட்ட “ஒவ்ண் கோல்”இனால் சிற்றி முன்னிலை பெற்றது. பின்னர், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்ரூனே அருமையான கோல் பெறும் வாய்ப்பொன்றைத் தவறவிட்டு, சிற்றி உறுதியான முன்னிலை பெறும் வாய்ப்பைத் தவறவிட்டார்.

அடுத்த நான்காவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற செல்சியின் டியகோ கொஸ்டா, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். பின்னர், அடுத்த 10ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற வில்லியான், செல்சிக்கு முன்னிலையை வழங்கினார். அதன் பின்னர், போட்டியின் இறுதி நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற ஈடின் ஹஸார்ட் வெற்றியை உறுதி செய்ய, 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி வெற்றி பெற்றது.

இப்போட்டியில், ஆட்டத்தினை விட போட்டியின் இறுதியில் இடம்பெற்ற சம்பவங்களே கவனத்தை ஈர்த்திருந்தன. போட்டியின் மேலதிக நிமிடத்தின்போது, ஏற்கெனவே மோதிய செல்சியின் டேவிட் லூயிஸை தவறாகக் கையாண்ட சிற்றியின் சேர்ஜியோ அக்ரோ சிவப்பு அட்டை காட்டப்பெற்று வெளியேற்றப்பட்டிருந்தார். முன்னரும் இவர்கள் இருவரும் மோதியதோடு, போட்டியின் முதலாவது பாதியில், அக்ரோவினை லூயிஸ் கையாண்டிருந்தபோது மத்தியஸ்தர் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, சீஸ்க் பப்ரிகாஸைப் பிடித்ததுக்குக்காக, பெர்ணான்டின்ஹோவுக்கும் சிவப்பு அட்டை காட்டப்பெற்று வெளியேற்றப்பட்டிருந்தார். அக்ரோவுக்கு நான்கு போட்டிகள் தடையும், பெர்ணான்டின்ஹோவுக்கு மூன்று போட்டிகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

ஆர்சனல், வெஸ்ட் ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 5-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. ஆர்சனல் சார்பாக, அலெக்ஸிஸ் சந்தேஸ் மூன்று கோல்களையும், மெசூட் ஏஸில், ஒக்ஸ்லேட் சம்பர்லின் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், 5-0 என்ற கோல் கணக்கில் சுவான்சீ சிற்றியைத் தோற்கடித்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .