2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பெயார்ண், பார்சிலோனா, ஆர்சனல் வெற்றி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையில் இடம்பெற்றுவரும் சம்பியன்ஸ் லீக் தொடரில், நேற்று (06) இடம்பெற்ற குழுப் போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டிகளில், பெயார்ண் மியூனிச், பார்சிலோனா, ஆர்சனல், நாப்போலி ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, மன்செஸ்டர் சிற்றி, செல்டிக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும், பரிஸா ஜேர்மா, லூடோகொரேட்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது.

பெயார்ண் மியூனிச், அத்லெட்டிகோ மட்ரிட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பெயார்ண் சார்பாக பெறப்பட்ட கோலினை, “பிறீ கிக்” ஒன்று மூலமாக அபாரமாக ரொபேர்ட்டோ லெவன்டோஸ்கி பெற்றிருந்தார்.

எவ்வாறெனினும், குழு “டி”யில் தமது முதலிடத்தை அத்லெட்டிகோ  ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்த நிலையில், குறித்த போட்டியின் முடிவானது குழு நிலைகளில் மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கவில்லை. பெயார்ண் குறித்த குழுவில் இரண்டாமிடத்தைப் பெற்றது.

பார்சிலோனா, ஜேர்மனியக் கழகமான பொரிஸியா மொச்சன்கிளட்பா ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா வெற்றிபெற்று, குழு “சி”யில் தமது முதலிடத்தை பலமாக உறுதிப்படுத்தியது. பார்சிலோனா சார்பாக மூன்று கோல்களைப் பெற்ற ஆர்டா துரான், லியனல் மெஸ்ஸி பெற்ற கோலுக்கான பந்துப்பரிமாற்றத்தையும் வழங்கியிருந்தார்.

ஆர்சனல், சுவிற்ஸர்லாந்துக் கழகமான பேஸில் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆர்சனல், குழு “ஏ”யில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. ஆர்சனல் சார்பாக லூகாஸ் பெரேஸ் மூன்று கோல்களைப் பெற்றதுடன், அலெக்ஸ் இவோபி ஒரு கோலைப் பெற்றிருந்தார்.

மன்செஸ்டர் சிற்றி, ஸ்கொட்லாந்துக் கழகமான செல்டிக் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. சிற்றி சார்பாக பெறப்பட்ட கோலினை கெலெச்ஸி லெஹாஞ்சோ பெற்றிருந்தார். குழு “சி”யில் இரண்டாமிடத்தினை மன்செஸ்டர் சிற்றி ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்த நிலையில், இப்போட்டியின் முடிவு குழுநிலையில் மாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கவில்லை.

பிரான்ஸ் கழகமான பரிஸா ஜேர்மா, பல்கேரிய அணியான லூடோகொரேட்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. பரிஸா ஜேர்மா அணி சார்பாக, எடின்சன் கவானி, ஏஞ்சல் டி மரியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் அல்லது ஆர்சனல் போட்டியின் முடிவைப் பிரதிபலித்தால், குழு “ஏ”யில் முதலிடம் பெற்றிருக்கலாம் என்ற நிலையில், சமநிலையில் போட்டி முடிவடைந்தமை காரணமாக, இரண்டாமிடத்தையே பரிஸா ஜேர்மா பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X