2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மரணமடைந்தார் ஜோனோ லொமு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் றக்பி ஜாம்பவானான ஜோனோ லொமு, தனது 40ஆவது வயதில் மரணமடைந்தார். அவரது இந்த மரணம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீண்டகாலமாக சிறுநீரகம் சம்பந்தமான நோயினால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை நியூசிலாந்தில் வைத்து மரணமடைந்தார்.

நியூசிலாந்துக்காக 1994ஆம் ஆண்டு விளையாட ஆரம்பித்த அவர், 2002ஆம் ஆண்டு, தனது 27ஆவது வயதில் ஓய்வுபெற்றிருந்தார்.

1996ஆம் ஆண்டு, அவரது சிறுநீரக நோய் அடையாளங் காணப்பட்டிருந்தது. அரிதானதும் கடுமையானதுமான நோயாக அது இனங்காணப்பட்டது.

ஓய்வின் பின்னர், 2004ஆம் ஆண்டு, சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்கு உள்ளாகிய போதிலும், அது 2011ஆம் ஆண்டில் செயற்படுவது நின்றி போயிருந்தது.

எனினும், தொடர்ந்தும் செயற்பட்ட அவர், இங்கிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற றக்பி உலகக் கிண்ணப் போட்டிகளுக்காகச் சென்று, நியூசிலாந்துக்குத் திரும்பிய மறுநாளே, மரணமடைந்துள்ளார்.

நியூசிலாந்து சார்பாக 63 போட்டிகளில் விளையாடிய அவர், 37 'ட்ரை"களைப் பெற்றுக் கொடுத்திருந்தார். இது, நியூசிலாந்துக்காகப் பெற்றுக் கொடுக்கப்பட்ட 5ஆவது அதிகூடிய ட்ரைகளாகும்.

உலகக் கிண்ணத்தை வென்ற அணியொன்றில் இடம்பெற்றிருக்காத போதிலும், றக்பி உலகக் கிண்ண வரலாற்றிலேயே, அதிக ட்ரைகளைப் பெற்ற இணைச் சாதனைக்கு, அவர் சொந்தக் காரராவார். அவரும், தென்னாபிரிக்காவின் பிரையன் ஹபானாவும் 15 ட்ரைகளை உலகக் கிண்ணத்தில் பெற்றுள்ளனர். தவிர, உலகக் கிண்ணத் தொடரொன்றில் அதிக ட்ரைகள் என்ற சாதனையும், அவர்  வசமே காணப்படுகிறது. அவரும் நியூசிலாந்தின் ஜூலியன் சவேயும் தென்னாபிரிக்காவின் பிரையன் ஹபானாவும் 8 ட்ரைகளைப் பெற்றுள்ளனர். இதில் லொமு, 1999ஆம் ஆண்டு இச்சாதனையைப் படைத்ததோடு, ஜூலியன் 2015இலும் பிரையன் 2007இலும் இச்சாதனையைப் படைத்திருந்தனர். தவிர, 1995ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில், 7 ட்ரைகளைப் பெற்றிருந்தார். இது, இரண்டாவது அதிகூடிய ட்ரைகளாகும்.

அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்திய நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, 'முழு நாட்டினதும் எண்ணங்களும், அவரது குடும்பத்தோடு காணப்படுகின்றன" என்றார்.

நியூசிலாந்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜொனதன் கோல்மாமன் கருத்துத் தெரிவிக்கையில், 'நியூசிலாந்தின் முதலாவது பூகோள றக்பி சுப்பர் ஸ்டார் அவர்" எனக் குறிப்பிட்டார். அத்தோடு, 'அவரது விளையாட்டுக் காலத்திலும், பின்னர் சிறுநீரக நோய் காரணமான போராட்டத்திலும், அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்தார்" எனக் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .